

ரஜினியின் வீடியோவைத் தொடர்ந்து ட்வீட்டையும் நீக்கிவிட்டது ட்விட்டர் தளம். இதனால் ரசிகர்கள் ட்விட்டர் தளத்துக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 326 பேரைப் பாதித்துள்ளது. பலரும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இந்தியாவில் பேருந்துகள் எதுவுமே ஓடவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.
சுய ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் "வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தத் தகவல் உறுதியானது அல்ல என்பதால், ட்விட்டர் தளம் தங்களுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்கிவிட்டது. இதனால் பெரும் சர்ச்சையானது. இதனிடையே இந்த ட்விட்டர் வீடியோ வெளியீட்டுக்குப் பிறகு, மற்றொரு ட்வீட்டில் தான் வீடியோவில் பேசிய தகவலை ஆங்கிலத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டு, அதனுடன் யூடியூப் தளத்தில் தான் பேசியதிற்கான லிங்க்கையும் ரஜினி கொடுத்திருந்தார்.
தற்போது இந்த ட்வீட்டையும் நீக்கிவிட்டது ட்விட்டர் தளம். இதுவும் உறுதியான தகவல் இல்லை என்பதால் ட்விட்டர் தளம் நீக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனிடையே, ரஜினி ரசிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்துக்கு எதிராக ஹேஷ்டேகை உருவாக்கி, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ரஜினி பேசிய வீடியோ அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும், சிலர் ரஜினியின் வீடியோ பதிவு நீக்கத்துக்கு திமுகவினர்தான் காரணம் என்று அவர்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.