

மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் பாக்யராஜ் வீடியோ வடிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 296 பேரைப் பாதித்துள்ளது. பலரும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே, நாளை (மார்ச் 22) ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம், பஸ்கள், ரயில்கள் ஓடாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மக்கள் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பல்வேறு திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது, மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வீடியோ வடிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பாக்யராஜ் பேசியிருப்பதாவது:
”பொதுவாக நமக்குக் கஷ்டம் என்று ஒன்று வந்துவிட்டால், உடனே ஓடிவந்து காப்பாற்றுவது நமது மனைவி - பிள்ளைகள் - சொந்த பந்தங்கள் - அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான். ஆனால், இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் யாருமே நமக்கு அருகில் வரமுடியாது. நம்மளும் அவர்களைப் பார்க்க முடியாது. இது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்.
இதை தவிர்க்கத் தான் நம்ம சுயபாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் கை கழுவுவது, இடைவெளி விட்டு இருத்தல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி ஜி அவர்கள் மக்கள் ஊரடங்கு என்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிற்குள்ளே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார். மேலும், மாலை 5 மணிக்கு அவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் வைத்து காப்பற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் மரியாதை செய்யும் விதமாக வீட்டு வாசலில் நின்று கைதட்டுவது என்று சொல்லியிருக்கிறார். அதை அவசியம் செய்ய வேண்டும்.
இந்த நோய் நம்மோடு போவது அல்ல. நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தாக்கிவிடும். அதனால் தான் இவ்வளவு பாதுகாப்புடன் இருங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால் இந்த கரோனா தொற்று வராமல் இருக்க என்னவெல்லாம் பின்பற்றச் சொல்கிறார்களோ, அதைப் பின்பற்றுங்கள்”
இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.