Published : 21 Mar 2020 03:26 PM
Last Updated : 21 Mar 2020 03:26 PM

அவதூறு பதிவுகள் செய்வோரையும் கை கழுவுங்கள்: விவேக்

கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக அவதூறு பதிவுகள் செய்வோரையும் கை கழுவுங்கள் என்று விவேக் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.

மேலும், கரோனா வைரஸ் தொற்று குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இது தொடர்பாகப் பலரும் இந்தச் செய்தி நம்பகமானதா என்று தெரியாமல், பலருக்கும் பார்வேர்டு செய்து வருகிறார்கள். இது தொடர்பாகத் தமிழக அரசு வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே இது தொடர்பாக விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”கரோனாவை விட மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவெனில் எதிர்மறை, அவநம்பிக்கை, ஆதாரமற்ற தரவு, பீதி கிளப்பும் வதந்திகளைப் பரப்பும் பதிவுகளே. நாம் மனதால் ஒன்றுபட்டும், உடலால் தனித்தும் இயங்க வேண்டிய தருணம் இது. செய்வோம்.வெளியே போகக் கூடாது எனில் உள்ளே போவோம்!ஆம்! தியானம்.

நாம் இரண்டு நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்வோம். 1. அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல் 2. எதிர்மறை மற்றும் அவதூறு பதிவுகள் செய்வோரைக் கை கழுவுவது. ஒன்று உடல் நலம் காக்கும் மற்றொன்று மன நலம் காக்கும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமாகப் பத்திரமாக இருங்கள்”

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x