மக்கள் ஊரடங்கு அன்று இணையம் வழியே குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி: இயக்குநர் வசந்தபாலன் அறிவிப்பு

மக்கள் ஊரடங்கு அன்று இணையம் வழியே குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி: இயக்குநர் வசந்தபாலன் அறிவிப்பு
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கையாக நாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கும் நாளில், இணையம் வழியே ஓவியப் போட்டியை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 285 பேரைப் பாதித்துள்ளது. பலரும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே, நாளை (மார்ச் 22) ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் ஊரடங்கு அன்று ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

''நண்பர்களே ! தனிமைப்படுத்துதல் தேவைதான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்குப் பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையைக் குழந்தைகள் மீது பிரயோகிப்பது. 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத் தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல், கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம்?

அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப் போட்டியை அறிவிக்கலாம் என்று தோன்றியது. வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளை பேப்பரில் வண்ணப் பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்னஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

காலக்கெடு: 22-ம்தேதி காலை 10 மணி முதல் 23-ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விவரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.

தலைப்பு : கரோனாவை வெல்வோம்”.

இவ்வாறு இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in