

கரோனாவால் வீட்டிலேயே அடைந்துகிடப்பவர்களுக்கு ஆறுதலாக இருப்பது சின்னத் திரை. சன் தொலைக்காட்சியின் ‘மகராசி’, விஜய் தொலைக்காட்சி யின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ஜீ தமிழ் ‘சத்யா’ உள்ளிட்ட அனைத்து தொடர்களும் வழக்கம்போல நகர்ந்து வருகின்றன.
இதற்கிடையில், ஐஎம்பிபிஏ(Indian Motion Picture Producers Association) அறிக்கை அடிப்படையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவிதமான படப்பிடிப்புகள், அதுதொடர்பான பணிகள் அனைத்தும் கடந்த 19-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
திரைப்படங்களின் கதை வேறு. படப்பிடிப்பு தள்ளிப்போனால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துக் கொள்ளலாம். தொடர் களின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும், ஒருசில நாட்கள் ஒளிபரப்பத் தேவையான காட்சிகள் மட்டுமே கையிருப்பில் இருக்கும். இத்தகைய சூழலில், சுமார் 2 வார காலத்துக்கு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தொடர்கள் என்ன ஆகும்? பிரதானதொலைக்காட்சிகள் பக்கம் அலசி யதில் கிடைத்த தகவல்கள்..
‘படப்பிடிப்புகள் ரத்து செய் யப்பட உள்ளன’ என்ற தகவல் வந்த உடனேயே, சன் தொலைக்காட்சி யின் ‘ரோஜா’, ‘மகராசி’ உள்ளிட்ட தொடர்களின் நிர்வாகிகள் ஒவ் வொரு நாள் படப்பிடிப்பையும் குறைந்தது 3 குழுவினரைப் பயன் படுத்தி 3 இடங்களில் நடத்தி உள்ளனர்.
‘‘மார்ச் 19 முதல் படப்பிடிப்பு ரத்தாகப் போகிறது என்ற செய்தி 4 நாட்கள் முன்பு தெரியவந்தது. கிடைத்த 4 நாட்களிலும் அதிகாலை 4 மணி முதல் படப்பிடிப்பை நடத்தினோம். இதனால், வரும் 31-ம் தேதி வரைக்குமான அத்தியாயங்கள் தயார். அதன் பிறகும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டிய சூழல் நீடித்தால் பெரும் சிரமம்’’ என்கின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி தரப்பில் விசாரித்தபோது, ‘‘மார்ச் இறுதி வரைக்குமான தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்கூட்டியே எடுத்து வைத்துவிட்டோம்.
அதனால் அடுத்த 2 வாரங் களுக்கு பிரச்சினை இல்லை. ஐஎம்பிபிஏ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் 30-ம் தேதி நடக்க உள்ளது. அதன் பிறகே, அடுத்தகட்ட பணிகள் குறித்து தெரியவரும்’’ என்றனர்.
இம்மாத இறுதி வரைக்குமான நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினை இல்லை என்றே விஜய், கலர்ஸ் தமிழ் தரப்புகளும் தெரிவித்தன.
அதற்குப் பிறகும் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்படுகிற பட்சத்தில், ஏற்கெனவே ஒளிபரப்பான தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரிசைகட்டக்கூடும்.
தொடர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ‘ஒரு அத்தியாயம் 21 நிமிடங்கள்’ என்ற அளவில் தயாரித்து தொலைக்காட்சி தரப்புக்கு அனுப்பினாலும், விளம்பரங்கள் கருதி அதை இன்னும் சில நிமிடங்கள் குறைத்து ஒளிபரப்புவதும் உண்டு. இவ்வாறு, சேகரமாகும் தொடரின் பகுதிகள் சில நாட் களுக்கு நீட்ட உதவும் என்றும் கூறப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களுக்கான அடுத்த 2 வார படப்பிடிப்பு முடிந்துவிட்ட போதிலும், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிறைவாக, அனைத்து தொலைக்காட்சிகள் தரப்பும் இன்னொரு முக்கிய பிரச்சினையையும் முன்வைக்கின்றன. ‘‘மார்ச் 31-ம்தேதிக்கு பிறகு படப்பிடிப்புதொடங்கலாம் என்று அறிவித்தால்கூட நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்சினை பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஒரு நடிகை குறைந்தது 3 தொடர்களில் நடிப்பதால் எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கால்ஷீட் கேட்கும். அதை சமாளிப்பது இன்னும் பெரிய சவால்’’ என்கின்றனர்.