

நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றி இருப்பதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டைக் குறிப்பிட்டு வரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் நடந்த வழக்கில் இறுதியாக இன்று (மார்ச் 20) காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நமது நாட்டுப் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. பெண்கள் அதிகாரமளித்தலுக்கு முக்கியக் கவனம் செலுத்தும், சமத்துவத்துக்கும் வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "7 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி வழங்கப்பட்டுள்ளது என்று உண்மையாகவே நீங்கள் நினைக்கிறீர்களா? குற்றம் நடந்து குறைந்தது 6 மாதத்தில் மரண தண்டனையை நாம் வலியுறுத்தும் நேரம் இது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இந்த குற்றங்களால் பெண்கள் உயிரிழப்பது சரி என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் தாமதமாக நீதி வழங்கியிருக்கிறோம்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.