

ஒரு பேருந்து நடத்துநராக ஆரம்பித்து இன்று இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்ததை, தான் அடுத்தடுத்த அதிசயங்களாகப் பார்ப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை.
இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையைப் பற்றிய கேள்விக்குப் பதில் கூறிய ரஜினிகாந்த், "எனது ஒட்டுமொத்த வாழ்க்கையே அதிசயம் தான். ஏன் இந்த நிகழ்ச்சியைக் கூட எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் இதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. டிஸ்கவரி தொலைக்காட்சியில் இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை" என்று கூறியுள்ளார்.
பந்திபூர் தேசியப் பூங்காவில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. இந்த விசேஷப் பகுதி மார்ச் 23-ம் தேதி அன்று டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. க்ரில்ஸுடன் சாகசப் பயணம் செய்துள்ள ரஜினிகாந்த் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், இந்தியாவில் தண்ணீர் சேமிப்பு குறித்தும் கூட இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்தியாவில் முதல்வர் நரேந்திர மோடிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் தோன்றும் இரண்டாவது பிரபலம் ரஜினிகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலம் என எட்டு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.