

கண்டக்டர் டூ நடிகர், புகழைக் கையாள்வது எப்படி உள்ளிட்ட பியர் கிரில்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்' உலகம் முழுக்கப் புகழ் பெற்றதாகும். இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த பியர் கிரில்ஸ் உடன் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்து கொண்டார்.
தற்போது டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இங்கும் இந்நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பியர் கிரில்ஸுடன் ரஜினி கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.
தற்போது இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த முதன்முறையாக 2 நிமிடம் 40 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. இதில் பியர் கிரில்ஸுடன் ரஜினி பேசிய விஷயங்கள் சிறுசிறு பகுதிகளாக இடம் பெற்றுள்ளன.
தண்ணீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு ரஜினி பதில் அளிக்கையில், "தண்ணீரை யார்` ஆள்கிறார்களோ, அவர்களே உலகை ஆள்கிறார்கள். தண்ணீர் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினை. இந்தியாவில் இது மிகப்பெரிய பிரச்சினை” என்றார்.
மேலும், "18-19 வயது இருக்கும் போது என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?" என்ற பியர் கிரில்ஸின் கேள்விக்கு ரஜினி பதில் அளிக்கையில், "பெங்களூரு அரசுப் பேருந்தில் கண்டக்டராகப் பணிபுரிந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
''அங்கிருந்து நடிகராக எப்படி முடிந்தது?'' என்ற கேள்விக்கு, "சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். பெரிய இயக்குநரான கே.பாலசந்தர் என்னைத் தேர்வு செய்து எனது பெயரை மாற்றி நடிகனாக்கினார். நிஜத்தில் எனது பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்." எனவும் தெரிவித்துள்ளார்.
'உங்களுக்கு இருக்கும் புகழை எப்படிக் கையாள்கிறீர்கள்?' என்ற பியர் கிரில்ஸின் கேள்விக்கு ரஜினி, "நான் அந்தப் புகழை எப்போதுமே என் புத்திக்குள் எடுத்துக் கொள்வதில்லை. நடித்து முடித்தவுடன் ரஜினிகாந்த் என்பதை மறந்துவிடுவேன். சிவாஜிராவ் ஆக மாறிவிடுவேன். பின்பு யாராவது என்னிடம் ரஜினிகாந்த் என்றால் மட்டுமே 'ஆம். நான் ரஜினிகாந்த்' என்ற எண்ணம் வரும்" எனப் பதிலளித்துள்ளார் ரஜினி.
இறுதியாக, "உண்மையான சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் என் வாழ்க்கையில் இப்படிச் செய்ததில்லை. சூப்பர். நன்றி" என ரஜினி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் ஷு லேஸை பியர் கிரில்ஸ் கட்டிவிடும் காட்சி இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பியர் கிரில்ஸ், "நீங்கள் ரொம்ப ஃபிட்டாக இருக்கிறீர்கள். தெரியுமா. நான் உங்களிடம் உங்களுடைய வயது என்னவென்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்வீர்களா?" என்ற கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரஜினி சிறிதும் தயக்கமில்லாமல் "70 வயதாகிறது" என்று பதிலளித்துள்ளார்.
"நீங்கள் ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்" என்று பியர் கிரில்ஸ் கூறுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.