

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.சிவா அணிக்குப் போட்டியாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகிகள் பதவியேற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் அணி உருவாக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.
இதில் முதலாவதாக, டி.சிவா தனது தலைமையிலான அணியை அறிவித்தார். அதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார் மற்றும் துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும், இந்த அணி சார்பில் செயற்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் இந்த அணி உருவாகியுள்ளது. இதில் தலைவராக முரளி, துணைத் தலைவர்களாக சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர். ராஜேஷ், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் செயற்குழு உறுப்பினர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
இந்த அணிக்கான தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.