சட்டத்துக்குப் புறம்பாகப் பார்க்க வேண்டாம்: 'தாராள பிரபு' தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள்

சட்டத்துக்குப் புறம்பாகப் பார்க்க வேண்டாம்: 'தாராள பிரபு' தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள்

Published on

சட்டத்துக்குப் புறம்பாகப் பார்க்க வேண்டாம் என்று 'தாராள பிரபு' தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கல்விக்கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் பல்வேறு படக்குழுவினர் தங்களுடைய வெளியீட்டை மாற்றியமைக்க ஆலோசித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மார்ச் 13-ம் தேதி வெளியான படங்களில் ஒன்று 'தாராள பிரபு'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் ரீமேக்காகும். இங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த வேளையில், கரோனா முன்னெச்சரிக்கைக்காக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெரும் சோகத்தில் இருக்கிறது படக்குழு.

இந்த விவகாரம் தொடர்பாக, 'தாராள பிரபு' படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

“ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாகப் பல வெற்றிப் படங்களை விநியோகித்த எங்களுக்கு, நீங்கள் ஆரம்பம் முதலே அளித்து வருகின்ற அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி. இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், விவேக், தான்யா ஹோப் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற எங்களது முதல் தயாரிப்பான ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

உலகே ஸ்தம்பித்துப் போயிருக்கின்ற இந்த சோதனையான நேரத்தில், நாம் அனைவருமே பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதிவேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் CoVid-19 பாதிப்பால், நாம் அனைவருமே உரிய பாதுகாப்புடன் வீட்டிலேயே இருப்பதோடு மட்டுமின்றி, தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு இந்த தருணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

கடின உழைப்பும் தீவிரக் காதலும் கொண்டு படைக்கப்பட்ட ‘தாராள பிரபு’ திரைப்படம், ஒரு ஆகச்சிறந்த கருத்தைப் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதற்குக் கிடைத்த உங்கள் அன்பும் ஆதரவும் ஈடு இணையற்றது. இத்தகைய ஒரு நிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் அதனைக் காட்சிப்படுத்த முடியாத சூழல் உருவானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஆகையால், மீண்டும் திரையிடும் நேரத்தில் ரசிகப் பெருமக்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரும் அதே நேரத்தில், சட்டத்திற்குப் புறம்பான வேறெந்த வழிகளிலும் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இந்த இக்கட்டான நிலைமை சீராகி, திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர், ‘தாராள பிரபு’ மீண்டும் திரையிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு ஸ்கிரீன் சீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in