

'வலிமை' படத்தில் அஜித்துடன் பைக் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் ஹியூமா குரேஷி.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அஜித்துக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஹியூமா குரேஷி. அஜித்துடன் முதன்முறையாக நாயகியாக நடிக்கும் இவர், அவருடன் இணைந்து பைக் சண்டைக்காட்சிகளிலும் நடிக்கவுள்ளார். இதற்காக வேகமாக பைக் ஓட்டுவது உள்ளிட்ட சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பில் அஜித் - ஹியூமா குரேஷி இணைந்து வில்லன் ஆட்களுடன் சண்டையிடும் காட்சிகளைப் படமாக்குவார்கள் எனத் தெரிகிறது. நீரஷ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார்.
'வலிமை' படத்துக்கு முன்பாக பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த 'காலா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹியூமா குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது.