

கரோனா அச்சம் தொடர்பாக மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 1.80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் கூட்டமாகக் கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். கரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போது, கரோனா அச்சம் மற்றும் மருத்துவர்கள் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கார்த்தி கூறியிருப்பதாவது:
''அரசாங்கம், அனைத்து மருத்துவமனைகள், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் என நம்மை கோவிட்-19 பாதிப்பிலிருந்து பாதுகாக்க எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பவர்களுக்கு என் மரியாதைக்குரிய வணக்கம். இப்போதும் கடற்கரையில் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. வீட்டிலேயே இருந்து, முறையான சுகாதாரத்தைப் பின்பற்றி இவர்களின் முயற்சியை ஆதரிப்போம்’’.
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்