

விஜய் என்றாலே வெற்றி, மாஸ் என்று சிம்ரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நீண்ட நாட்கள் கழித்து சிம்ரன் கலந்து கொண்டு, விஜய் பாடல்களுக்கு நடனமாடினார்.
அதனைத் தொடர்ந்து சிம்ரன் பேசும்போது, "எனக்குத் திரையில் சிறந்த துணை என்றால் அது விஜய்தான். 'துள்ளாத மனமும் துள்ளும்' வெளியாகி 21 ஆண்டுகளாகிவிட்டன. 'ப்ரியமானவளே' வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன. இரண்டுமே எனது சிறந்த படங்கள். நன்றி விஜய். 'மாஸ்டர்' படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பேசினார்.
இறுதியாக விஜய் பேசும்போது முதலில் சிம்ரன் குறித்துதான் பேசினார். "சிம்ரன் ஜி இங்கு இருக்கீங்களா.... இல்லையா.. எங்களுக்காக இந்த விழாவில் நடனமாடினீர்கள். உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டேன். உங்களுக்கு அது அவசியமே இல்லை. இருந்தாலும் நன்றி" என்று குறிப்பிட்டார் விஜய். அப்போது சிம்ரன் விழா அரங்கில் இல்லை.
தற்போது 'மாஸ்டர்' வெளியீட்டு விழாவில் அனைவரும் பேசியதை சன் டிவி தங்களுடைய யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சிம்ரன், "அன்பைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே. விஜய் என்றாலே வெற்றி, விஜய் என்றாலே மாஸ்'டர் - மாஸ்'டர் விஜயம் காண வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.