'தாராள பிரபு' மறுவெளியீட்டிலும் ஆதரவு கொடுங்கள்: ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்

'தாராள பிரபு' மறுவெளியீட்டிலும் ஆதரவு கொடுங்கள்: ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்
Updated on
1 min read

'தாராள பிரபு' மறுவெளியீட்டிலும் ஆதரவு கொடுங்கள் என்று படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று இதுவரை 137 பேருக்கு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொற்று பரவாமல் இருப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் முடிவால் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த 'தாராள பிரபு' படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 'தாராள பிரபு' படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

”இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் 'தாராள பிரபு' திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எங்களது 'தாராள பிரபு' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலைக் கடந்த பின், அதன் மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்”.

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in