'திரெளபதி' படத்தின் வெற்றி எந்த அளவுக்கு லாபம்?- இயக்குநர் மோகன்.ஜி தகவல்

'திரெளபதி' படத்தின் வெற்றி எந்த அளவுக்கு லாபம்?- இயக்குநர் மோகன்.ஜி தகவல்
Updated on
1 min read

'திரெளபதி' படத்தின் வெற்றி எந்த அளவு என்பது குறித்து இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கினார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார்.

இந்த ஆண்டின் முதல் மாபெரும் வெற்றிப் படமாக 'திரெளபதி' அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழகத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பதிவில், "கரோனா காரணமாக நேற்றுடன் திரையரங்குகளில் 'திரெளபதி' படக் காட்சிகள் முடிந்தன. 18 நாட்கள்... நூறு திரையரங்குகளில்... மாபெரும் சரித்திர வெற்றியாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்... பாதம் தொட்டு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். இனி அடுத்த பட வேலைகள் ஆரம்பமாகும். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு, ''வசூல் 15 கோடி ரூபாய் இருக்குமா? நிகர லாபம் 7-8 கோடி ரூபாய் இருக்குமா? விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்டம் அடையவில்லையே? சொல்லுங்கள் ப்ரோ'' என்று அவரை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்பவர் கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மோகன்.ஜி, "விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். யாரும் அவர்களுடைய பணத்தை இழக்கவில்லை. சராசரியாக அனைவருக்கும் 3 மடங்கு லாபம் கிடைத்தது. ரியல் ப்ளாக் பாஸ்டர்" என்று தெரிவித்துள்ளார்.

'திரெளபதி' படத்துக்குப் பிறகு மீண்டும் ரிச்சர்ட் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மோகன்.ஜி. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in