

கோயில் நகரான கும்பகோணத்தில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து காணாமல் போகின்றன. அடுத்தநாளே திரும்பக் கிடைக்கும் குழந்தைகள் அடுத்துவரும் நாளில் இறந்துவிடுகின்றன. இதை விசாரிக்கத் தொடங்குகிறார் காவல் ஆய்வாளரான வால்டர் (சிபிராஜ்). அவரது விசாரணையில் பல எதிர்பாராத உண் மைகள் வெளிப்படுகின்றன. குழந்தைகள் கடத்தல், அவற்றின் திடீர் மரணம் ஆகியவற்றின் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர், வால்டரால் அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த முடிந்ததா என்பது கதை.
கதாநாயகி, பாடல்கள் ஆகிய இரண்டு அம்சங்களுமே தேவைப்படாத இந்த கதைக்குள், அவற்றை இணைத்ததால், எதிர்பார்த்தபடியே அடுத்தடுத்த காட்சிகள் வரிசைகட்டி வந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களை எழுதிய வகையில் அவற்றுக்கான பின்னணியை அழுத்தமாகக் கொடுக்கத் தவறியுள்ளனர். சமுத்திரக்கனி கதாபாத்திரம் சுத்தமாக மனதில் நிற்கவில்லை. வசனமாவது கவனிக்க வைக்கிறதா என்றால், அதுவும் பல ஹீரோ – வில்லன் கதைகளில் கேட்டுப் பழகிய ‘டெம்பிளேட்’ வார்த்தைகள்.
முதன்மை நடிகர்கள், குணச் சித்திரங்கள், துணை நடிகர்கள் என யாரையும் இயக்குநர் வேலை வாங்கியதாகத் தெரியவில்லை. மிகை தென்பட்டாலும் அதையே இயல்பான நடிப்பாக தென்படச் செய்துவிடும் நடிகர் சார்லியைக்கூட நாடகத்தனமாக நடமாட விட்டுள்ளனர்.
காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்கு உயரம், குரல், தோற்றம் என எல்லாம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது சிபிராஜுக்கு. நடிப்பிலும் குறை வைக்கவில்லை. ஆனால், காதல் காட்சிகள் தவிர மற்ற எல்லாகாட்சிகளிலும் உடலை எதற்காக
இத்தனை விரைத்துக்கொண்டு நிற்கிறார் என்பது தெரியவில்லை.
அறிமுகக் காட்சியில் அவருக்கு தரப்பட்ட ‘பில்டப்’, அதன் பிறகானவிசாரணை மற்றும் வில்லனுடனான மோதல் காட்சிகளில் வடிந்துவிடுகிறது. புதுமை ஏதும் இல்லாத காட்சிகளால் சிபியின் உழைப்பு எடுபடாமல் போகிறது.
நாயகி ஷிரின் காஞ்ச்வாலா ஒரு வணிகப் படத்தில் கதாநாயகிக்கான பங்களிப்பை கச்சிதமாக செய்திருக் கிறார். ரித்விகா, ஷனம் ஆகிய மேலும் இரு நாயகிகள் மனதில் ஒட்டாமல் கடந்து சென்றுவிடுகின்றனர்.
அரசியல்வாதியாக நடித்துள்ள பவா.செல்லத்துரை முடிந்தவரை தனது கதாபாத்திரத்துக்கு ஊட்டம் தருகிறார். நட்ராஜ் எதிர்மறை கதா பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரேமாதிரி நடிப்பை தந்தால் பார்வையாளர் மனதில் ஒட்டமுடியாது என்பதை அவர் உணரவேண்டும்.
தர்மா பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையையும் குறைசொல் வதற்கில்லை. கதைக்களம் கும்பகோணம் என்பதை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராசாமதி, காட்சி உருவாக்கும் மனநிலை, உணர்வுநிலைக்கு பொருந்தாத வகையில் அளவுக்கு அதிகமான பறவைக் கோணங்களில் படம் பிடித்துள்ளார். படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா நினைத்திருந்தால் இதை குறைத்திருக்கலாம்.
பார்வையாளர்கள் அதிகம் அறிந்திராத ‘பாம்பே ரத்த வகை’ என்ற விஷயத்தை மையமாக வைத்துக்கொண்டு, ஒரு மருத்துவ க்ரைம் த்ரில்லர் வகை படம் தரவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் யு.அன்பு. ஆனால் அது ‘க்ரைம் த்ரில்லர்’ என்ற இடத்தை எட்டுவதற்கே மூச்சுத் திணறியிருக்கிறது.