

பாராட்டுகளைத் தாண்டி நிறைய அவமானங்கள், தோல்விகளைச் சந்தித்தேன் என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு உருக்கமாகப் பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இசை வெளியீட்டு விழா மூலம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தனு பேசியதாவது:
“இந்த வாய்ப்பைக் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு முதலில் நன்றி. இந்த மேடையில் 'என் பெயர் சாந்தனு. இதுதான் என் முதல் படம்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஏனென்றால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். சில படங்கள் நன்றாகப் போயின. சில படங்கள் போகவில்லை. நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பாராட்டுகளைத் தாண்டி நிறைய அவமானங்கள், தோல்விகளைச் சந்தித்தேன். இது எனக்கு மட்டுமல்ல. ஒரு நடிகரின் வாழ்க்கை இப்படித்தான். இதுதான் என் முதல் படம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், மீண்டும் என்னை மக்களிடம் அறிமுகப்படுத்துகிற படம் இது. அந்த வாழ்க்கையைக் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு ரொம்ப நன்றி.
வாழ்க்கையில் சீக்ரெட் புக் என்று ஒன்று உள்ளது. அது இன்னொருவர் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. நம்ம வாழ்க்கை என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, நினைக்கிறோமோ அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அதில் உள்ளது என்பார்கள்.
நானும் விஜய் அண்ணாவுடன் ஒரு படம் பண்ண வேண்டும், அதன் மூலம் வெளியே வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். என்னை விட என் நண்பர்கள், ரசிகர்கள் இந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆகையால்தான் என் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமாக நடந்துள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
முக்கியமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' படத்திலிருந்து என்னைக் கூட வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தார். அது நடக்கவில்லை. 'கைதி' படத்திலும் நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இந்தப் படத்தில் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்துள்ளார். அவர் கண்டிப்பாகப் பெரிய இயக்குநராக வருவார். இப்போதே அவர் பெரிய இயக்குநர்தான். இன்னும் பெரிய இயக்குநராக வளர்வார். மானிட்டர் முன்னால் உட்காரவே மாட்டார். மனதிற்குள் படத்தை ஓட்டிக்கொண்டே இருப்பார். எடிட்டிங் பண்ணிக் கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு ரொம்ப ஷார்ப்பாக இருப்பார்.
அடுத்து விஜய் அண்ணாவைப் பற்றிதான். அவரைப் பற்றி ஒரு குட்டி ஸ்டோரி. சின்ன வயதில் 'காதலுக்கு மரியாதை' உள்ளிட்ட சில படங்களைப் பார்த்து விஜய் என்ற ஒரு நடிகர் இருக்கிறார். நன்றாக இருக்கிறார் என்ற கண்ணோட்டத்தில்தான் இருந்தேன். 'கில்லி' படத்தின் மூலம் ஒரு மாற்றம். அப்போதிலிருந்து அவருக்கு ரசிகனாக மாறினேன். அவர் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரொம்ப நுணுக்கமாகக் கவனிக்கத் தொடங்கினேன்.
அனைவருடைய வாழ்க்கையிலும், இரண்டாவது வாழ்க்கை திருமணத்தில்தான் தொடங்கும். அந்தத் தருணத்தில் அனைவருமே பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எல்லாரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். விஜய் அண்ணா அந்தத் தருணத்தில் கூட இருந்து தாலி எடுத்துக் கொடுத்து என் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுத்தார். அன்று முதல் விஜய் அண்ணாவை ரொம்ப பெர்சனலாக, என் அண்ணனாகப் பார்க்கத் தொடங்கினேன். நன்றி விஜய் அண்ணா”.
இவ்வாறு சாந்தனு பேசினார்.