

பாடல் தலைப்பு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதன் தலைப்பை உடனடியாகத் திருத்தி வெளியிட்டுள்ளது 'மாஸ்டர்' படக்குழு.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் பேச்சுமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் குறித்த விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இதனிடையே 'மாஸ்டர்' படத்தின் பாடல் தலைப்பால் சர்ச்சை உருவானது. அதனைத் தொடர்ந்து, அதை உடனடியாக மாற்றியது படக்குழு. நேற்று (மார்ச் 15) இசை வெளியீட்டு விழாவினை முன்னிட்டு, 'மாஸ்டர்' படத்தில் என்னென்ன பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்ற ட்ராக் லிஸ்ட்டை படக்குழு வெளியிட்டது.
அதில் 'தறுதல கதறுனா' என்று ஒரு பாடலின் தலைப்பு அமைந்திருந்தது. இது இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அஜித்தைத்தான் 'தல' என்று அழைப்பார்கள். ஆகையால், 'மாஸ்டர்' படக்குழுவினரை அஜித் ரசிகர்கள் கடுமையாகச் சாடினார்கள். இதனால் 'மாஸ்டர்' ட்ராக் லிஸ்ட் வெளியானதிலிருந்தே இணையத்தில் சர்ச்சை உருவாகிக் கொண்டே இருந்தது.
இதனைத் தொடர்ந்து சில மணித்துளிகளில், பாடலின் பெயரை 'போனா போகட்டும்' என்று மாற்றி புதிய ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டது 'மாஸ்டர்' படக்குழு. இதனால் இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்தது. தங்களுடைய சாடலால்தான் 'மாஸ்டர்' படக்குழுவினர் பெயரை மாற்றிவிட்டனர் என்று அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.
அனைத்துச் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய், "நண்பர் அஜித் போல் கோட் சூட் போட்டு வந்தேன்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டு சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.