கரோனா வைரஸ் பற்றிப் பயப்படாதீர்கள்: விஜய் சேதுபதி

கரோனா வைரஸ் பற்றிப் பயப்படாதீர்கள்: விஜய் சேதுபதி
Updated on
1 min read

கரோனா வைரஸ் பற்றிப் பயப்படாதீர்கள் என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசினார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் ரசிகர்கள், பத்திரிகையாளர் என யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. படக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டார்கள்.

இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு விஜய் மற்றும் படக்குழுவினரைப் புகழ்ந்து பேசினார். இறுதியாக உலகமெங்கும் பரவி வரும் கரோனா வைரஸ் குறித்து தனது பேச்சில் எடுத்துரைத்தார். கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது:

“தமிழ்நாட்டில் ஒரு அழகான சொல் இருக்கிறது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், 'அவர் குணமாகி விட்டாரா' என்று கேட்பார்கள். அவர் சரியாகிவிட்டாரா என்று கேட்க மாட்டார்கள். ஏனென்றால் குணம் என்பது நம் மனது. நமது மனசு ஆரோக்கியமாக இருந்தால், நம்மிடம் எந்த நோயும் வராது என்று சொல்வார்கள்.

இந்த கரோனா வைரஸ் பற்றிப் பயப்படாதீர்கள். இயற்கையாக இதே மாதிரி ஏதாவது ஒன்று வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், மனதை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். மனதினைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான். மேலே இருந்து ஒன்று வராது. தனது சொந்த உறவுகளைக் கூட தொட்டுப் பேச முடியாத இந்த சமயத்தில், தொட்டு மருத்துவம் பார்க்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

தயவு செய்து யாரும் பயப்படாதீர்கள். ஆம், வைரஸ் வந்திருக்கிறது தான். தீவிரம் தான். ஆனால் மனதை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள். நானும் அதைத் தான் பண்ணுகிறேன். என் குழந்தைகளும் அதைத் தான் சொல்லிக் கொடுக்கிறேன்”

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in