Published : 16 Mar 2020 10:44 AM
Last Updated : 16 Mar 2020 10:44 AM

வாழ்க்கையில் என் மாஸ்டர் யார்? - விஜய் சேதுபதி பதில்

வாழ்க்கை மற்றும் சினிமாவில் உங்கள் மாஸ்டர் யார் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் ரசிகர்கள், பத்திரிகையாளர் என யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. படக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டார்கள்.

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகத் திருநெல்வேலி படப்பிடிப்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்திருந்தார். மேடையில், விஜய்யுடன் நடித்த அனுபவம் உள்ளிட்டவைத் தொடர்பாக நீண்ட உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விஜய் சேதுபதியிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதில் "வாழ்க்கையில் உங்கள் மாஸ்டர் யார்? சினிமாவில் உங்கள் மாஸ்டர் யார்?" என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி அளித்த பதில்:

“வாழ்க்கை என்றால் எப்போதுமே எங்கப்பா தான். அப்பாவை அடித்துக் கொள்ள இந்த உலகத்தில் யாருமே கிடையாது. தான் சம்பாதிக்கிற பணமாக இருந்தாலும் சரி, அறிவாக இருந்தாலும் சரி அது முழுமையாகப் போய் தன் பிள்ளைகளிடம் போய் சேர வேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே. தான் பேசும் வார்த்தைகள் எல்லாம் பிடிக்காதோ இல்லையோ, பிள்ளைகளிடம் போய் சேருதோ இல்லையோ ஆனால் 1000 வார்த்தைகள் கொட்டுவார்கள். அது வாழ்க்கையில் என்றைக்காவது தடுக்கிவிழும் போது, அப்பா பேசிய வார்த்தைகள் நமக்கு துணையாக வந்து நிற்கும். அது தான் அறிவைக் கொடுப்பது. அதைத் தான் எங்கப்பா எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இங்கு நிற்கிறேன்.

எப்போதாவது கோபம் வரும் போது எங்கப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து திட்டியிருக்கிறேன், சண்டையிட்டு இருக்கிறேன். ஒரு நாள் நல்ல சரக்கடித்துவிட்டு, எங்கப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து பயங்கரமாக திட்டினேன். ”நான் நன்றாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எங்கு போயிட்ட நீ” என்று கேட்டேன். எங்கப்பாவை எனக்கு அந்தளவுக்குப் பிடிக்கும். அவர் மட்டும் தான் மாஸ்டர். வேறு யாருமில்லை.

சினிமாவில், சந்திக்கும் அனைத்து மனிதர்களும் தான். ஏனென்றால் கலை என்பது ரொம்ப பெரியது. நீங்கள் கற்பனைப் பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பெரியது. அதில் சந்திக்கும் அனைத்து மனிதர்களுடமிருந்து, அவர்கள் பண்ணும் சின்ன சின்ன வேலைகளிலிருந்தும் கற்றுக் கொள்கிறேன். நான் யார் எதை அழகாகப் பண்ணினாலும் ரசிப்பேன். முதலில் நான் அனைவருடைய ரசிகன். மனிதர்களை ரொம்பவே ரசிக்கிறேன், இந்த உலகத்தை ரொம்பவே நேசிக்கிறேன். கடவுளைக் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கிறேன்.”

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x