

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் பணிகள் இன்று போட்டோ ஷுட் உடன் தொடங்கியது.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினி. தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.
ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இப்படத்துக்கு 'கபாலி' என்று பெயரிடப்பட்டு இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் இயக்குநர் ரஞ்சித்.
இந்நிலையில், இப்படத்தின் பணிகள் இன்று போட்டோ ஷுட் உடன் தொடங்கியது. இந்த போட்டோ ஷுட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார் ராதிகா ஆப்தே. இன்று நடைபெறும் போட்டோ ஷுட்டில் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே பங்கேற்று இருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது. அடுத்த மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி 60 நாட்கள் நடைபெற இருக்கிறது.