

நடிகர் சங்கத் தேர்தலுக்காக ரஜினியை சந்தித்து தனது குழுவினருக்கு ஆதரவு கோரினார் விஷால்.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக சரத்குமார் மற்றும் விஷால் குழுவினர் இருதரப்புமே நாடக நடிகர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் குழுவில் நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை ரஜினியை சந்தித்து தங்களது குழுவுக்கு ஆதரவு தருமாறு விஷால் குழுவினர் கேட்டுள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்க இருப்பதால், விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரங்கள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியை சந்தித்த விஷால் கமலை சந்தித்துப் பேசினார். தற்போது விஜய்யை சந்திக்க உள்ளார். இது குறித்து விஷால் கூறியதாவது:
''ரஜினி, கமல், விஜய் மட்டுமின்றி அனைத்து நடிகர்களையும் சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பு எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்பதற்காக அல்ல. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்குதான்.
அதே தருணத்தில் நடிகர் சங்கத்தில் இதுவரை நடந்தது என்ன? எங்கள் அணி செய்ததும், செய்யப்போவதும் என்ன? என்பது குறித்தும் பேசி வருகிறோம்'' என்று விஷால் கூறினார்.