

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை என நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
நடிகர் ஆர்யா நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்யா கூறியதாவது:
இது என்னுடைய 25-வது திரைப்படம். ஒவ்வொரு நடிகருக்கும் 25-வது படம் என்பது ஒரு மைல்கல். இதை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளேன். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் சங்கத்தில் இளைஞர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே விஷால், சிவகுமார், பொன்வண்ணன் போன்றோரின் விருப்பமாக உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். இதை கருத்தில் கொண்டுதான் நடிகர் சங்கத் தேர்தலில் இளைய நடிகர்கள் போட்டியிடுகிறோம்.
சரத்குமார், ராதாரவி போன்றவர்கள் இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவர்கள் அரசியலில் இருந்தாலும் நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை எவ்வித அரசியல் தலையீடும் இல்லை.
மது, புகைபிடித்தல் என்பது தனி நபர் விருப்பம். ஒரு நடிகனாக எனக்கும் சமூக அக்கறை உண்டு. அதனால்தான் இனிவரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை முடிந்தவரை தவிர்க்க முடிவெடுத்துள்ளேன் என்றார்.