முதல் பார்வை: வால்டர்

முதல் பார்வை: வால்டர்
Updated on
2 min read

கும்பகோணத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அங்கு பெரும் அரசியல்வாதியாக இருப்பவர் பவா செல்லதுரை. கட்சியிலும் பெரும் செல்வாக்குடன் இருக்கிறார். அந்த ஊரில் திடீரென்று பச்சிளம் குழந்தைகள் காணாமல் போகின்றன. 24 மணி நேரத்துக்குள் குழந்தைகள் திரும்பக் கிடைத்தாலும், அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுகிறது. ஏன் என்று விசாரிக்கத் தொடங்குகிறார் சிபிராஜ். அப்போது பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் தெரியவருகின்றன. இதில் சமுத்திரக்கனி, நட்டி உள்ளிட்டோருக்கு என்ன சம்பந்தம், ஏன் குழந்தைகள் இறக்கின்றன உள்ளிட்ட விஷயங்களுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

கதையாகக் கேட்கும்போது, நல்ல த்ரில்லராக இருக்கும் போல என நினைத்திருப்பீர்கள். ஆனால், படமாகப் பார்க்கும்போது எந்தவொரு சுவாரசியமும் ஏற்படவில்லை. இந்தக் கதையைப் படமாக்கும் விதத்தில் ரொம்பவே சொதப்பி வைத்திருக்கிறது படக்குழு. Bombay Blood Group என்ற புது விஷயத்தை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களை அதிகமாக சுவாரசியப்படுத்தி இருக்கலாம். வழக்கமான படமாக நகர்வதுதான் பிரச்சினை.

காவல்துறை அதிகாரியாக சிபிராஜ். இந்தக் கதைக்கு தன் தரப்பு நியாயத்தைச் செய்திருக்கிறார். மாஸான காட்சியின் மூலம் அறிமுகமானாலும், காவல்துறை அதிகாரி என்பதால் ரொம்ப விறைப்பாக நடித்துள்ளார். அடிக்கடி முறைப்பது, மீசையை முறுக்குவது என சில இடங்கள் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் ஏன் இப்படி நடித்துள்ளார் என்றே தோன்றுகிறது.

சிபிராஜுக்கு அடுத்து முக்கியக் கதாபாத்திரத்தில் நட்டி. அவருடைய கதாபாத்திரத்துக்கானப் பின்னணி என்ன என்பதை இன்னும் சொல்லியிருக்கலாம். முழுமையாக வடிவமைக்கப்படாமல் இருக்கிறது.

அரசியல்வாதியாக பவா செல்லதுரை. அவருடைய வசன உச்சரிப்பு, காட்சியமைப்புகள் என எதுவுமே அவரை அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் அடிக்கடி க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து, அதிலும் அதிகமாகவே நடித்துள்ளார். அரசியல்வாதிகள் பேசும் வசனங்கள், அவர்களுக்கான பில்டப்களில் இவரது சில காட்சிகள் சிரிப்பைத்தான் வர வைக்கின்றன.

ஆரம்பத்தில் சில காட்சிகள், இடைவேளைக்குப் பின்பு சில காட்சிகள் என வந்துவிட்டுப் போகிறார் சமுத்திரக்கனி. அவருடைய கதாபாத்திரத்தில் மனதில் ஒட்டவே இல்லை. ஷிரின், சனம் ஷெட்டி, ரித்விகா என மூன்று பெண் கதாபாத்திரங்கள். அனைத்துமே ரொம்பவே சுமார் ரகம். அதிலும் நாயகி கதாபாத்திரம் வரும்போது, இப்போது இந்த வசனம், அது முடிந்தவுடன் பாட்டு என நினைத்தீர்கள் என்றால் படத்தில் சரியாக வந்துவிடுகிறது.

ஒரு படத்தின் கதை எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட அதன் உருவாக்கம் மிகவும் முக்கியம். அதில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ள படம் 'வால்டர்'. சிபிராஜின் அறிமுகக் காட்சியிலேயே இதனை உணர முடிகிறது. மேலும், கும்பகோணத்தைச் சுற்றி படமாக்கி இருப்பதால், இது கும்பகோணம் என்பதைக் காட்ட நிறைய ட்ரோன் ஷாட்களை இணைத்துள்ளார்கள். அது ஏனென்று தெரியவில்லை. மேலும், சில காட்சிகள் ஃபோகஸே இல்லை. படத்தின் இசை, சவுண்ட் மிக்ஸிங் என அனைத்து விதத்திலும் படக்குழு மெனக்கிடலில் ஈடுபட்ட மாதிரியே தெரியவில்லை. அதிலும் சில காட்சிகளின் பின்னணி இசை, தொலைக்காட்சியில் வரும் நாடகத்தின் பின்னணி இசையை விட மோசம்.

படத்தின் முதல் பாதியில் வரும் நாயகியின் காதல் காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே கதையோட்டத்துக்கு மிகப்பெரிய வேகத்தடை தான். சில காட்சிகளை எல்லாம் படக்குழுவினர் எப்படி இந்த அளவுக்குக் கவனிக்காமல் விட்டார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, சார்லிக்கு போன் வரும். அதை அவர் அடுத்து, 'என்னது' என்று அதிர்ச்சியடைவார். ஆனால், பின்பு தான் என்ன விஷயம் என்று எதிரில் பேசுபவர் சொல்வார். இதே மாதிரி சில காட்சிகளைக் கூறலாம். நடிகர்களை நடிக்க வைத்த விதம், பின்னணி இசை, சவுண்ட் மிக்ஸிங், உடைகள் ஆகியவற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளது இந்தப் படம்.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி பரவாயில்லை. மேலும், வசனங்கள் மூலமாகவே கரோனா வைரஸ் பற்றியும் உள்ளே சேர்த்துள்ளார்கள். BOMBAY BLOOD GROUP-ஐ வைத்து பின்னணியில் நல்லதொரு க்ரைம் த்ரில்லரைச் சொல்லியிருக்கலாம். அதைத் தவிரவிட்டு விட்டது படக்குழு. மொத்தத்தில் இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது உருவாக்கத்தில் தற்போது இப்படியொரு படமா என்று யோசிக்க வைத்தது. ஏனென்றால், இதை விட குறும்படம், தொலைக்காட்சி நாடகங்கள் எல்லாம் அற்புதமாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in