

ரஜினியின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (மார்ச் 12) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பார்வை, அரசியல் மாற்றம் ஏற்படுத்த வைத்துள்ள 3 திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எடுத்துரைத்தார்.
தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் என்று ரஜினி கூறினார். இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பார்வை அவரது ரசிகர்கள் மத்தியில் சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அவரது இன்றையப் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
”தெளிவான தொலைநோக்குப் பார்வை, புதிய சித்தாந்தம், சுயநலமற்ற, யதார்த்தமான, நேர்மையான, மனப்பூர்வமான செயல்பாடு. அரசியலில் தலைவரின் நிலை இதுதான். அற்புதமான உரை தலைவா. அரசியல் மாற்றத்துக்கான எங்கள் நம்பிக்கை. இயக்கம் ஆரம்பமாகட்டும். இப்ப இல்லைனா எப்பவும் இல்ல!!”
இவ்வாறு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்
தற்போது தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதன் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.