

நடிகர் அஜித் எவ்வளவு நாள்தான் அமைதி காப்பார் என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரபரப்பான ட்வீட், சர்ச்சைக் கருத்து என எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பவர் நடிகை கஸ்தூரி. கடந்த சீஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.
இணையத்தில் ஒவ்வொரு உச்ச நடிகருக்கும் இருக்கும் ரசிகர் கூட்டம், அவர்களுக்குப் பிடித்தமான நடிகர்களைப் பற்றி யார் விமர்சனம் செய்தாலும் அவர்களை விட்டுவைப்பதில்லை. கெட்ட வார்த்தைகள் தொடங்கி, ஆபாச மீம்கள் வரை குறிப்பிட்ட நபரைக் குறிவைத்துத் தாக்குவார்கள்.
அப்படி சமீபத்தில் அஜித் ரசிகர்களின் வசை, கிண்டல்களுக்கு கஸ்தூரி ஆளாகியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களின் ஆபாச ட்வீட்டுகளுடன் போராடி வந்த கஸ்தூரி, ஒரு அஜித் ரசிகர் பகிர்ந்த கொச்சையான பதிவுகளைக் கண்டு அஜித்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜித் ரசிகர்கள் கஸ்தூரி பற்றி தவறாக இட்ட பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ள கஸ்தூரி, ட்விட்டர் நிர்வாகத்திடம், "ட்விட்டரில் வேலை செய்பவர்கள் இப்படியான துன்புறுத்தலை ஆதரிக்கிறார்களா? நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவை நேரடியாகக் குறிப்பிட்டு, "அஜித் சார், எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெட்கக்கேடு, கண்ணியமில்லாத அஜித் ரசிகர்கள், தீயவர்கள் போன்ற ஹேஷ்டேகுகளையும் கஸ்தூரி பயன்படுத்தியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஸ்தூரி கோரியுள்ளதாகத் தெரிகிறது. அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார்.
கஸ்தூரியின் ட்வீட்டைத் தொடர்ந்து, ட்விட்டர் இந்தியா நிறுவனம் அவர் குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.