

'துப்பறிவாளன் 2' தொடர்பாக விஷால் வெளியிட்ட அறிக்கைக்கு, இயக்குநர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.
விஷால் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இயக்குநராகியுள்ள விஷாலுக்கு அவரது திரையுலக நண்பர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்தப் படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அஷ்யா, கெளதமி, ரகுமான், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கத் தொடங்கப்பட்டது. முதற்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட மோதலால், மிஷ்கின் விலகிவிட்டார். ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கு முன்பு, மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், (விஷாலின் அறிக்கையை முழுமையாகப் படிக்க: Click Here)
மேலும், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்குநர் மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. (அந்தக் கடிதத்தை முழுமையாக படிக்க: Click Here) விஷால் அறிக்கை, மிஷ்கின் கடிதம் இரண்டுமே இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
இது தொடர்பாக மிஷ்கினிடம் தொலைபேசியில் கருத்து கேட்டபோது, முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்பு, '' 'துப்பறிவாளன் 2' படத்தைப் பற்றி விஷால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைச் சிரிப்புடன் உற்று கவனித்து வருகிறேன்” என்றார் மிஷ்கின்.
விரைவில் தனது தரப்பு நியாயங்களை முன்வைத்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டு வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.