

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திரைப்பட விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் போலவே திரைப்பட விமர்சனங்கள் குறித்த விவாதங்களும் அதிகரித்துள்ளன. விமர்சனங்களுக்கான எதிர்வினை கமெண்ட் செக்ஷனில் மட்டுமல்லாமல் தனிப் பதிவுகளாகவும் குறிப்பிட்ட விமர்சகர்களின் விமர்சனங்கள் குறித்தும் பொதுவாகத் திரை விமர்சனச் சூழல், விமர்சனங்களின் தரம் ஆகியவை பற்றியும் அவ்வப்போது ஃபேஸ்புக். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதப் பொருளாகி வருகின்றன.
ட்விட்டரில் திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலமான திரைப்பட விமர்சகர்களும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதால் திரைப்பட விமர்சனங்கள், விமர்சனங்களுக்கான எதிர்வினைகள், விமர்சனங்கள் குறித்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு.
சில விமர்சகர்கள் எல்லை மீறிப் போகும்போது திரைத்துறைப் பிரபலங்கள் அந்த விமர்சகரைக் கண்டித்துத் திரைத் துறை பிரபலங்கள் ட்வீட்டோ காணொலியோ வெளியிட்ட சம்பவங்களும் அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ஒரு சில படங்களின் விமர்சனங்கள் குறித்து சில விமர்சகர்களுக்கும் பொதுப் பார்வையாளர்களுக்கும் இடையிலான விவாதம் ட்விட்டரில் இன்றுவரை களைகட்டி வருகிறது.
கலையா கருத்தா?
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான ‘ஜிப்ஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மதத்தைவிட மனிதமே உயர்ந்தது என்று இந்தப் படம் சொன்ன செய்தி உன்னதமானது என்றாலும் அது சொல்லப்பட்ட விதம் சினிமா என்ற கலை வடிவத்துக்கு நியாயம் செய்வதாக இல்லை என்று பலர் கருதுகிறார்கள். இந்நிலையில் இந்தப் படம் சொல்லவரும் செய்திக்காக அதைக் கொண்டாடிப் பாராட்டும் வகையிலான விமர்சனத்தை ஒரு ஆங்கில ஊடக நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இன்னொரு ஆங்கில ஊடக நிறுவனத்தின் பிரபல விமர்சகர் திரைக்கதை, காட்சியமைப்பு படமாக்கம் ஆகியவற்றிலிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டிப் படத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்விரண்டையும் முன்வைத்து ஒரு ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும்போது அதன் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா, கலையம்சத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்ற விவாதம் ட்விட்டரில் நடந்து வருகிறது.
அதாவது நல்ல கருத்துகளைச் சொல்ல வரும் படங்களில் கலையம்சம் முன்னே பின்னே இருந்தாலும் அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் எவ்வளவு சிறப்பான கருத்தைச் சொல்லும் படமென்றாலும் சினிமா என்ற கலை வடிவத்துக்குக் குறைந்தபட்ச நியாயம் செய்யாத திரைப்படத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது சினிமா என்ற கலைக்கு மட்டுமல்லாமல் அது சொல்ல வரும் கருத்துக்கும் தீங்கையே விளைவிக்கும் என்று இன்னொரு சாரரும் விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மேற்கூறிய விமர்சகர் ஃபகத் ஃபாசில்-நஸ்ரியா நடித்த மலையாளப் படத்துக்கு அளித்திருந்த விமர்சனத்தை ஒட்டி இன்னொரு திரை விமர்சகர் ‘மலையாளம் தெரியாதவர்கள் மலையாளப் படங்களை விமர்சிக்கக் கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு சில மலையாளப் படங்களின் நுட்பம் புரியாது” என்று கூறியிருந்தார். கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளான இந்த ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.
மொழி தெரிந்தால் ஒரு படத்தை நன்கு புரிந்துகொண்டு சிறப்பாக விமர்சிக்க முடியும் என்ற கருத்து சரியானதுதான். ஆனால் ஒரு மொழியைத் தெரியாதவர்கள் அம்மொழியில் வெளியாகும் படத்தை விமர்சிக்கவே கூடாது என்று சொல்வது ஜனநாயக விரோதமானது. இன்று பெரும்பாலான மாற்று மொழிப் படங்கள் மல்டிபிளக்ஸ் அரங்குகளில் ஆங்கில சப்டைட்டிலுடன்தான் வருகின்றன. சப்டைட்டில்களின் தரமும் உயர்ந்துள்ளது.
இதனால் மொழி தெரியாமல் போவதால் விமர்சனத்தில் பிழை ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதையும் தாண்டி, மொழி தெரியாதவர் ஒரு படத்தை விமர்சிக்கக் கூடாது என்றால் நம் படங்களை சர்வதேச விமர்சகர்களால் விமர்சிக்க முடியாது. அதன் மூலம் நம் படங்களுக்குச் சர்வதேச சமூகத்தினரின் அங்கீகாரம் கிடைப்பதற்கான கதவு அடைக்கப்பட்டுவிடும். ‘பாகுபலி’ போன்ற படங்கள் சர்வதேச விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டதால்தான் அவை உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்தன என்பதை மறந்துவிடக் கூடாது.
திரைப்படங்களில் நல்ல கருத்துகளைச் சொல்வதும் சமூகத்தில் நன்மை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைப்படங்களை உருவாக்குவதும் வரவேற்கத்தக்க விஷயங்கள்தாம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒரு கலை வடிவத்தின் மூலமாகக் கருத்துகளைச் சொல்ல முயலும்போது அந்தக் கலையின் தேவைகளை அந்தக் கலையை ரசிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை விதி.
நல்ல கருத்துகளைப் பரப்புவது மட்டும்தான் முக்கியம் என்றால் ஒலிப்பெருக்கிகள், போஸ்டர்கள் வழியாக அக்கருத்துகளை நாடு முழுவதும் பரப்பிவிடலாம். சினிமா என்ற கலை வடிவத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அந்தக் கலை வடிவத்துக்கு ஏற்ற வகையில் கருத்தைச் சொல்லும்போதுதான் அது உரிய பலனைக் கொடுக்கும் என்பதைப் படைப்பாளிகள் உணர வேண்டும்.
விவாதிக்கப்படாத முக்கிய அம்சம்
எல்லாம் சரி. இந்த விவாதங்களில் முற்றிலும் யாராலும் பேசப்படாமல் விடுபட்டிருப்பது படங்களின் வணிக வெற்றி. ஒரு படம் எவ்வளவு சிறந்த கருத்துகளையும் கலையம்சத்தையும் உள்ளடக்கியிருந்தாலும் அவை வெகுமக்களை ஈர்த்து வணிக வெற்றியைப் பெற்றால்தான் திரைப்பட வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை விளையும்.
இந்தியாவில் வெகுஜன சினிமா என்பது கலையும் கேளிக்கையும் மட்டுமல்ல வணிகமும்தான். வணிகம்தான் இங்கு சினிமாவை இயக்குகிறது. நட்சத்திர நடிகர்கள் தயாரிப்பாளர், விநியோக்ஸதர்கள் முதல் லைட்பாய்கள், கிளாப் அடிக்கும் உதவி இயக்குநர்கள், டச் அப் பாய்கள் வரை லட்சக் கணக்கானவர்கள் திரைப்படத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சூழலில் கலைக்கும் கருத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை வணிக அம்சங்களை நிறைவேற்றுவதற்கும் அளிக்கப் படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
அதற்காக மோசமான கருத்துகளையோ சமூகத்தை நிலவு அவலங்களைக் கேள்வி கேட்காத கருத்துகளையோதான் பேச வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இன்று நல்ல கருத்து சொன்னால் சமூக ஊடகத்தில் இருக்கும் இளைஞர்களின் கவனம் கிடைக்கும் என்பதற்காகவே அவற்றைச் சாதாரண நகைச்சுவை, மசாலா திரைப்படங்களிலும் வலிந்து திணிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்லாத தமிழ்ப் படங்களே வருவதில்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவு தேவையற்ற கருத்துத் திணிப்பு திரைப்படங்கள் வழியாக நடந்து வருகிறது. இப்படிச் சொல்லப்படும் கருத்துகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதோடு கருத்து சொல்லும் முனைப்பில் அழுத்தமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, தரமான உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் குறைந்துவிடுகிறது. நல்ல கருத்துகளைச் சொல்லும் படங்கள் வணிக வெற்றிபெற்றால்தான் அவை மக்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பதை ஏற்க முடியும்.
எனவே, நல்ல கருத்துகளைச் சொல்வது, சினிமா என்ற கலைக்கு ஏற்ப அக்கருத்துகளைச் சொல்வது, வணிகத்தின் தேவைகளையும் நிறைவேற்றுவது இம்மூன்று குதிரைகளிலும் சமமான கவனத்துடன் சவாரி செய்யத் தெரிந்த ஜாக்கிகளாக தமிழ் சினிமா இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
- கிருஷ்ணா.