

'புட் சட்னி' யூடியூப் பிரபலம் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது.
ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தொடங்கிய யூடியூப் சேனல் 'ப்ளாக் ஷீப்'. இந்தக் குழுவில் இடம் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார்.
தற்போது 'ப்ளாக் ஷீப்' யூடியூப் சேனல் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. 'புட் சட்னி' யூடியூப் பிரபலம் ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் வழங்க, ப்ளாக் ஷீப் டீம் தயாரிக்கிறது.
இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (மார்ச் 11) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ரியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். சிவகார்த்திகேயன் க்ளாப் அடித்து இந்தப் படத்தைத் தொடங்கி வைத்தார்.
இதன் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இதில் அம்மு அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. இந்தப் படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த ப்ளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க ,ப்ளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.