மீண்டும் இணையும் 'திரெளபதி' கூட்டணி

மீண்டும் இணையும் 'திரெளபதி' கூட்டணி
Updated on
1 min read

'திரெளபதி' கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளது.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

2020-ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெற்றியாக இந்தப் படம் அமைந்துள்ளது. ஏனென்றால், இந்தப் படம் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இதுவரை தமிழகத்தில் சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. தயாரிப்புச் செலவுடன் வசூலை ஒப்பிடும்போதே, இந்தப் படத்தின் வெற்றி தெளிவாகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே படத்தின் இயக்குநர் மோகன், "2020-ம் ஆண்டின் முதல் பெரிய வெற்றிப் படம் 'திரெளபதி'. ஆதரவு அளித்த மக்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

'திரெளபதி' என்று கடவுள் பெயர் வைத்ததால்தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவாகப் புரிகிறது. அடுத்த படப் பெயரும் கடவுள் பெயர்தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 'திரெளபதி' படத்தின் இசையமைப்பாளர் ஜுபின் தனது ட்விட்டர் பதிவில், "எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் ரிச்சர்ட் மற்றும் இயக்குநர் மோகன்.ஜி ஆகியோர் இருக்கிறார்கள்.

இதன் மூலம் 'திரெளபதி' கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in