மக்கள் நிதியின் மூலம் உருவாகும் பெண் இயக்குநரின் படம் 

மக்கள் நிதியின் மூலம் உருவாகும் பெண் இயக்குநரின் படம் 
Updated on
1 min read

இருளர் பழங்குடிகளின் வாழ்க்கைப் பதிவைப் பேசும் 'மூப்பத்தி' திரைப்படம் மக்கள் நிதியின் (crowd fund) மூலம் உருவாகி வருகிறது.

மிஷ்கினிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'நந்தலாலா', 'முகமூடி' ஆகிய படங்களில் பணியாற்றியவர் ஈஸ்வரி. இவர் தற்போது தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலை, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களைச் சந்தித்து 6 மாதங்களுக்கும் மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட ஈஸ்வரி, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கையை திரைப்படமாகப் பதிவு செய்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் ஈஸ்வரி கூறுகையில், '' 'மூப்பத்தி' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படம் மக்கள் நிதியின் (crowd fund) மூலம் உருவாகி வருகிறது. இதற்கு இயக்குநர்கள் பா.இரஞ்சித், பாலாஜி சக்திவேல் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திரைப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாகக் கூறியுள்ளார். 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் இதில் பணிபுரிகிறார். பாலாஜி சக்திவேல், செம்மலர் அன்னம் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ஆனந்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, உமாதேவி பாடல்கள் எழுதுகிறார். ராதிகா நடன இயக்குநராகப் பணிபுரிகிறார்.

புரொடக்‌ஷன் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் காந்தம்மாள் உன் ஷூட்டிங்கில் ஒருநாளாவது பாத்திரம் கழுவித் தருகிறேன் என்று அன்பின் மிகுதியில் சொன்னார். தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையத்தால் அன்புள்ளம் கொண்ட நிறையப் பேர் எனக்கு நண்பர்களாகக் கிடைத்துள்ளனர். அவர்களால் சிறு பட்ஜெட்டில் திரைப்படம் இயக்குவது சாத்தியமானது'' என்றார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் குறித்த முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in