

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ஜிப்ஸி' படக்குழுவினருக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் தணிக்கை பிரச்சினையில் சிக்கி, நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
அதிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கட், பல காட்சிகள் ப்ளாக் அண்ட் ஓயிட் மாற்றம் எனப் படக்குழு மாற்றியுள்ளது. மார்ச் 6-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போது, இந்தப் படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலும் பாராட்டியுள்ளார். 'ஜிப்ஸி’ பார்த்துவிட்டு “மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ’ஜிப்ஸி’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் கமல்.