தமிழக முதல்வரின் செயலுக்கு தங்கர் பச்சான் பாராட்டு

தமிழக முதல்வரின் செயலுக்கு தங்கர் பச்சான் பாராட்டு
Updated on
1 min read

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயலுக்கு, இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதல்வருக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற படத்தை திருவாரூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விவசாயிகள் வழங்கினர். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி காரில் பயணம் செய்தார்.

அப்போது சித்தமல்லி என்ற இடத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த முதல்வர், காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி வெறும் காலுடன் வரப்பில் நடந்து சென்று நடவு வயலைப் பார்வையிட்டார். அங்கு நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர், நாற்றை வாங்கிக் கொண்டு வயலில் இறங்கி நடவுப் பணியில் ஈடுபட்டார்.

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. முதல்வரின் இந்தச் செயலுக்கு விவசாயிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”உறவுக் குடிகளை ஒரு பொருட்டாக மதிக்காத கடந்தகால முதல்வர்களுக்கிடையே போகிற போக்கில் நெல் நாற்றுக் கற்றையிலிருந்து எத்தனைப் பயிர்களை, எவ்வாறு, எவ்வளவு ஆழத்தில் ஊன்ற வேண்டும் என்பதை மிக இயல்பாகச் செய்த நம் முதல்வரின் காணொலியினை மீண்டும் மீண்டும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்!”

இவ்வாறு தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in