

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகளால், விஜய் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டு அனைத்து வகையிலான விளம்பரப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முந்தைய விஜய் படங்கள் போல் அல்லாமல், இந்த முறை படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழாவினை முடிக்கப் படக்குழு தீர்மானித்துள்ளது.
ஏனென்றால், 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா பாஸ் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் பெரும் சர்ச்சையானது. இதில் பல ரசிகர்களும் ஆவேசமாகப் பேசும் வீடியோக்களும் வெளியானது. ஆகையால், இந்த முறை எப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாமல் இருக்க, ரசிகர்கள் யாருக்குமே அனுமதியில்லை என்று முடிவு செய்துள்ளது படக்குழு.
இந்த இசை வெளியீட்டு விழாவின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. விழா நடைபெறும் போதே லைவ்வாக ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். ஆனாலும், விஜய்யை நேரில் பார்க்க முடியாத சோகமும் இருக்கிறது. 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்களுக்கு மட்டுமன்றி, விஜய் நடிப்பில் வெளியான படங்களிலிருந்து பாடல்கள் அடங்கிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன், வி.ஜே.ரம்யா, சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.