

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' வெளியீட்டுக்குத் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா. முதலில் 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்கினார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தப் படம் முழுமையாகத் தயாரானாலும், அதன் இறுதி வடிவம் திருப்தி தராததால் கைவிட்டுவிட்டார்கள். தமிழ் சினிமாவில் ஒரு படம் முழுமையாகத் தயாராகி கைவிடப்பட்ட முதல் படம் 'வர்மா' தான்.
அதனைத் தொடர்ந்து கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக் தயாரானது. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியில் வரவேற்பைப் பெறவில்லை. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு 'வர்மா' சிங்கப்பூரில் தணிக்கை செய்யப்பட்டது. அதன் சான்றிதழ் இணையத்தில் வெளியான போது பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
இது தொடர்பாக விசாரித்தபோது, 'வர்மா' படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது உறுதியானது. ஆனால் தொலைக்காட்சியில் ப்ரிமீயர் முறையில் திரையிடலாமா, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடலாமா அல்லது திரையரங்கில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. அனைத்திற்குமே தயாராக இருக்கும் வகையில், படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
'வர்மா' வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.