

ஃபேஸ்புக்கில் இணைவதாக வெளியான அறிக்கை போலியானது என்று அஜித் தரப்பு தெரிவித்தது.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்திலிருந்தும் ஒதுக்கியிருப்பவர் அஜித். ஆனால், அவருடைய ரசிகர்கள் தங்களுடைய இருப்பவை தினந்தோறும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். விஜய் ரசிகர்களுடன் போட்டி, தயாரிப்பாளர் போனி கபூரிடம் 'வலிமை' அப்டேட் கேட்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள்.
இதனிடையே, இன்று (பிப்ரவரி 6) மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானதால் உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்களும் உற்சாகமானார்கள். இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, "அந்த அறிக்கை போலியானது" என்ற ஒற்றை பதிலுடன் முடித்துக் கொண்டார்கள்.
சமூக வலைதளத்தில் வைரலான அந்த அறிக்கையில், "என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது.
தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார்.