’மாயன்’, ‘மூக்கன்’ நாசருக்கு பிறந்தநாள்! 

’மாயன்’, ‘மூக்கன்’ நாசருக்கு பிறந்தநாள்! 
Updated on
2 min read

ஹீரோவுக்கென பல இலக்கணங்கள் உண்டு. ஆனால் வில்லனுக்கு இலக்கணங்களோ எல்லைகளோ இல்லை. வில்லன் நடிகர் என்று பேரெடுத்த காலம் என்று உண்டு. பிற்காலத்தில், நடிப்பைக் கொண்டு, நடிகரின் பெயரை வைத்தே வில்லத்தனத்தைச் சொல்லப்பட்டது. அதாவது, ‘நம்பியார்த்தனம்’ என்று வில்லத்தனத்தைச் சொன்னார்கள். அப்படியான நம் மனதில் தனியிடம் பிடித்து, வில்லத்தனத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர்... நாசர். இதில் இவருக்கு ப்ரமோஷன்... குணச்சித்திரத்திலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான்!
எல்லோரிடமும் ஒரு ‘மாதிரி’ உண்டு என்பார்கள். அதாவது எல்லோரும் ஏதோவொருவரின் சாயலைத் தொட்டு ஒளிர்வார்கள்; மிளிர்வார்கள். ஆனால் எந்தச் சாயலும் இல்லாமல், எவரின் சாயலும் இல்லாமல் நடித்து மனதில் இடம்பிடித்த நடிகர்களில், நாசரும் ஒருவர். நடிக்கத் தொடங்கியது முதலே தனித்துத் தெரியத் தொடங்கினார். கே.பி. எனும் பாலசந்தர் பட்டறையில் இருந்து வந்தவர் எனும் பெருமையும் நாசருக்கு உண்டு. இவரின் ‘கல்யாண அகதிகள்’ மூலம் அறிமுகமானார் நாசர்.

குரு பாலசந்தரை ஈர்த்தது போலவே, சிஷ்யர் கமலையும் இவர் ஈர்த்தார். தொடர்ந்து கமலின் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தார். வரிசையாக வில்லனுக்கு முக்கிய ஆள், வில்லன், கோபக்கார போலீஸ், கெட்ட போலீஸ் என வெரைட்டி விருந்து கொடுத்துக்கொண்டே இருந்தவர், மாயன், மூக்கன், பத்ரி மூலமாக எடுத்ததெல்லாம் விஸ்வரூபம்.
‘தேவர்மகன்’ படத்தில், மாயன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டியெடுத்தார் நாசர். ஒருபக்கம் கமலுக்கு இணையாகவும் இன்னொரு பக்கம் சிவாஜிக்கு நிகராகவும் நடித்துப் பேரெடுத்தார். ‘அய்யா... அய்யோவ்... யோவ்...’ என்று பஞ்சாயத்தில் சிவாஜியை நோக்கி நாசர் எழுப்புகிற குரலையடுத்து, நாசருக்கு எதிராக தியேட்டரே கத்தி ஆர்ப்பரித்ததுதான் நாசருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிப் பரிசு! அந்த மாயன் கேரக்டரை வேறு எவரைக் கொண்டும் இட்டு நிரப்பவே முடியாது.
அடுத்து, பத்ரி. ‘குருதிப்புனல்’ பத்ரி. கதையின்படி, அந்த பத்ரியின் கொடூர டார்ச்சரைக் கண்டு, ஹீரோ கமலே நடுநடுங்கிப் போய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் மாறுவார். படம் பார்க்கிற ஆடியன்ஸையும் கிடுகிடுக்க வைத்துவிடுவார் நாசர், தன் நடிப்பின் மூலமாக! வசனங்கள் மிகமிகக் குறைவுதான். அதேசமயம் பாதி டயலாக்கை, அவரின் கண்களே ‘கன்வே’ செய்து, அடிவயிற்றில் கலவரத்தைத் தூண்டிவிடும்.
இப்படியாகத்தான்... ஆனால் ‘மூக்கன்’ நம் மனதிற்குள் நுழைந்தது தனி ரூட்டு. புது எபிசோடு. ‘மகளிர் மட்டும்’ மூக்கன், சபலக்கேஸ். அசடும் காமமும் வழிய நாசரின் பேச்சும் நடிப்பும் காமெடியாக ரசிக்கப்பட்டது. மூக்குக்கார ‘மூக்கன்’, எல்லோராலும் வாயாரப் பேசப்பட்டான். வில்லன் கிழக்கு, ஹீரோ மேற்கு. காமெடி என்பது தெற்கு. நாசர், நாலாதிசைக்குமான கலைஞனாக ஒளிர்ந்தார். இதுவும் அவரின் தனித்திறன்தான்!
நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் புதியதொரு அவதாரம் எடுத்தார். ‘அவதாரம்’ எனும் படத்தை இயக்கினார். அந்தப் படமும் இளையராஜாவின் இசையும் மறக்கவே முடியாத படமாக அமைந்தன. நடிப்பிலும் புதுப்பரிமாணம் காட்டி பிரமிக்க வைத்தார் நாசர்.

‘எம் மகன், ‘அவ்வை சண்முகி’, சந்திரமுகி’, ‘ஆவாரம்பூ’ என இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே முத்திரை காட்டி நடத்தியிருப்பதுதான் நாசர் ஸ்பெஷல்.

அதன் பின்னர், நடித்துக்கொண்டே இருந்தாலும் இடையிடையே பசி தீர்க்க, படங்களையும் இயக்கினார். ‘தேவதை’, ‘பாப்கார்ன்’, ‘முகம்’ என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். பண்பட்ட நடிகரான நாசர், மகா திறமை கொண்ட கலைஞர், சினிமா ஆர்வலர், தாகம் கொண்டவர் என்பவற்றையெல்லாம் அவர் இயக்கிய படங்கள் பறைசாற்றின.
ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் இயக்கம், இடையே நடிகர் சங்கப் பணிகள் என நாசர், எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் சுறுசுறுவிறுவிறு மனிதர். அப்படித்தான் திரையுலகில் கொண்டாடுகிறார்கள் அவரை!
நாசர் எனும் உன்னதக் கலைஞனுக்கு தன் நடிப்பால் மூக்கு மேல் விரல் வைக்கச் செய்யும் மூக்கனுக்கு, கொடூர முகம் காட்டி, ஆளுயர அரிவாளை வீசி அதகளம் பண்ணிய மாயனுக்கு... இன்று பிறந்தநாள்.
நாசருக்கு வாழ்த்துகள். நல்லகலைஞனைப் போற்றுவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in