

வெற்றி என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. எனக்கு அது நன்றாகவே தெரியும் என்று இயக்குநர் கௌதம் மேனன் பேசினார்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்தப் படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாளைக் காட்டிலும் இரண்டாம் நாளில் வசூல் அதிகரித்து, அப்படியே ஒவ்வொரு நாளும் அதிகரித்ததால், படக்குழு மகிழ்ச்சியில் இருந்தது.
இதற்காகப் பத்திரிகையாளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்தச் சந்திப்பில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
அதில் இயக்குநர் கௌதம் மேனன் பேசியதாவது:
“மக்களிடையே இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மேஜிக் என்பது திரையரங்கில் இருந்தது. 'அசுரன்', 'சைக்கோ', 'ஓ மை கடவுளே' ஆகிய படங்களைத் தொடர்ந்து, திரையரங்கில் மக்கள் கூட்டம் இருக்கும் படம் இதுதான். ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் படத்தை 4 முறை திரையரங்கில் பார்த்தேன். ஒவ்வொரு தயாரிப்பாளருமே இந்த மேஜிக்கிற்காகத்தான் ஏங்குவார்கள்.
வெற்றி என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. எனக்கு அது நன்றாகவே தெரியும். இந்தப் படத்தின் வெற்றியை எனது வெற்றியாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தொடர்பாக இயக்குநர் தேசிங் இங்கு பேசினார். போலீஸாக கெத்தாக இருந்துவிட்டு, க்ளைமாக்ஸ் காட்சி அப்படி அமைத்ததினால் மட்டுமே இந்தப் படம் நின்றது. அந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காகத் தான் இந்தப் படமே பண்ணினேன்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நிறையப் பேர் மெசேஜ், போன் பண்ணினார்கள். அதற்கு ரொம்ப நன்றி தேசிங். என்னோட படங்களில் சின்ன ரோல்களில் மட்டுமே நடித்திருப்பேன். ஏனென்றால் எனக்கு கேமரா முன்னால் நடிக்க நம்பிக்கையில்லை. முதல் காட்சியாக ஒரு சண்டைக்காட்சி வைத்திருந்தார். அதை மட்டும்தான் வேண்டாம் என்றேன். பிறகுதான் காரிலிருந்து இறங்கி வரும் காட்சியாக மாற்றினார்.
நடிகனாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் விஜய் மில்டன். அவர்தான் முதலில் என்னை 'கோலி சோடா 2' படத்தில் நடிக்க வைத்தார். அதனால் மட்டுமே என்னால் தைரியமாக இந்தப் படத்தில் நடிக்க முடிந்தது”.
இவ்வாறு கௌதம் மேனன் பேசினார்.