பாடிகார்ட்ஸுடன் வலம் வரும் நடிகர்கள்: ராதாரவி கிண்டல்

பாடிகார்ட்ஸுடன் வலம் வரும் நடிகர்கள்: ராதாரவி கிண்டல்
Updated on
1 min read

பாடிகார்ட்ஸுடன் வலம் வரும் நடிகர்களைக் கிண்டலாகப் பேசியுள்ளார் ராதாரவி.

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராஜவம்சம்'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதால், இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:

”ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத்தான் சர்ச்சை. இந்தப் படத்தின் இயக்குநர் கதிர் ரொம்பவே போராடி வந்தவர். இந்தப் படத்தில்தான் எங்களுடைய தேதிகளை முன்வைத்து நடிகர் சசிகுமார் தேதிகள் கொடுத்தார். படத்தில்தான் வீரனாக நடிக்கிறாரே தவிர ரொம்ப தங்கமான பிள்ளை.

சினிமாவுக்கு லாயக்கில்லாதவர் சசிகுமார். தலையைக் குனிந்து கொண்டே நடந்து போவார். நடிகர் என்றால் அப்படி பந்தாவாக பார்த்துக்கொண்டே நடந்து போக வேண்டாமா? நான் எல்லாம் அப்படியே பார்த்துப் பழகிவிட்டேன். அதனால், இவரைப் பார்க்கும் போது அசிங்கமாக இருக்கிறது. இப்போது எல்லாம் பாடிகார்ட்ஸ் போட்டுக் கொண்டுதான் நடிகர்கள் வருகிறார்கள். அதனால்தான் மக்கள் அவர்களுடைய படங்களுக்கு வருவதே இல்லை. நிறைய பாடிகார்ட்ஸ் போட்டவுடன், ஓஹோ அவருக்கு நம்ம தேவையில்லை போல என நினைத்துவிடுகிறார்கள். எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் பாடிகார்ட்ஸே கிடையாது.

சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை ஃபோகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன். சசிகுமாருக்கு இது செகண்ட் லைஃப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நல்ல லைஃப்தான்.

நிக்கி கல்ராணி நன்றாக நடித்துள்ளார். எல்லா கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விஷயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்றைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும்.

இனிமேல் ராதாரவி போவதற்கு வேறு கட்சியே இல்லை என்கிறார்கள். நான் மட்டும் தனியாகப் போய் விட்டு வந்தேன், உடனே தாவல் என்கிறீர்கள். கூட்டமாகப் போனார்களே அவர்கள் எல்லாம் என்ன கூட்டணியா? என்ன கொள்கையோடு அவர்கள் போய்விட்டார்கள். என்னைச் சொல்லக் கூடாது. என்னை விட சீனியர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.”

இவ்வாறு ராதாரவி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in