

அப்துல் கலாம் கனவு கண்ட மரம் நடுதல், கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் தெரிவித்தார்.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இயக்குநர் லாரன்ஸ் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். 'நாகா' மற்றும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என தான் இயக்க இருக்கும் படங்களுக்கு பெயரிட்டு இருக்கிறார் லாரன்ஸ்.
இவ்விரண்டு படங்களின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் சமூக கருத்தை வலியுறுத்தி உருவாக இருக்கும் கமர்ஷியல் படமாகும். இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
அதே போல 'நாகா' திரைப்படத்தை 'காஞ்சனா' படத்தைப் போல இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லாரன்ஸ். 'நாகா' படத்துக்கு வரவேற்பு கிடைத்தால் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ச்சியாக இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ராஜ நாகம் பாம்பை மையப்படுத்தி 'நாகா' கதையை அமைத்திருக்கிறார் லாரன்ஸ்.
இவ்விழாவில் வேந்தர் மூவிஸ் நிறுவனம் அளித்த முன்பணம் ரூ. 1 கோடிக்கான காசோலையை, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கனவு நனவாக அளிப்பதாக தெரிவித்தார் லாரன்ஸ்.
இது குறித்து லாரன்ஸ் பேசியது, "'காஞ்சனா', 'காஞ்சனா 2' படங்களின் வெற்றியால் என் நிலை உயர்ந்தது. தற்போது AUDI கார், வீடு என நானும் உயர்ந்திருக்கிறேன். டிக்கெட் கொடுத்து படம் பார்த்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.
வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' ஆகிய இரு படங்களையும் நானே இயக்கி நடிக்கிறேன். இந்த படங்களுக்கான முன்பணத் தொகையான 1 கோடியை மக்களின் நலத்திட்ட உதவிக்களுக்காக கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்தில் 100 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களூக்கு ஒரு லட்சம் கொடுக்கப் போகிறேன். கேரளாவைப் போல் தமிழகமும் பச்சைபசேல் என்று ஆக வேண்டும். நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அப்துல் கலாம் கனவு கண்ட மரம் நடுதல், கல்வி, மருத்துவ உதவிகளுக்கு நான் வழங்கும் இந்த தொகை பயன்படும்" என்று தெரிவித்தார்.