

சமூக வலைதளத்தில் பரவி வரும் வதந்திகள் தொடர்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்த் தொலைக்காட்சிகள் வரிசையில் முன்னணியில் இருப்பது ஜீ தமிழ்த் தொலைக்காட்சி. பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் தங்களை முன்னிறுத்திக் கொண்டே வருகிறது. இதில் சில நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், புதிதாக சில நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவார்கள்.
அவ்வாறு சமீபமாக சமூக வலைதளங்களில் "ஜீ தமிழ் நிகழ்ச்சிக்காக அழகுத் தமிழில் பேசக்கூடிய இளம் இலக்கிய பேச்சாளர்கள் (பள்ளி மாணவர்கள்) தேவைப்படுகிறார்கள். இக்குழுவில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் ஆர்வமுள்ள, திறமையுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு வரும் 06-03-2020 வெள்ளிக்கிழமைக்குள் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இது தமிழகம் முழுமைக்குமான ஒரு தேடல். ஆகவே பிற குழுக்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று தொலைபேசி எண்ணும் ஒரு குறுந்தகவலும் பகிரப்பட்டு வந்தது.
இந்தத் தகவலுக்கு ஜீ தமிழ்த் தொலைக்காட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் தொடர்பாக ஜீ தமிழ் நிறுவனம், "ஜீ தமிழ் குறித்தோ, ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் குறித்தோ அதிகாரபூர்வமற்ற சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகும் எந்தக் கருத்துக்கும் ஜீ தமிழ் நிர்வாகம் பொறுப்பேற்காது.
மேலும், ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் குறித்து ஜீ தமிழ்த் தொலைக்காட்சியிலும் அதிகாரபூர்வ சமூக வலைதளத்திலும் பகிரப்படும் கருத்துகள் மட்டுமே உண்மையானவை. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தப் போலியான செய்தியை நம்பிவிட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.