

கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் 'வலிமை' படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அதே படக்குழுவினர் இணைந்து 'வலிமை' படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. எங்கு, எப்போது படப்பிடிப்பு என்பதை மிகவும் ரகசியமாகப் பகிர்ந்துகொண்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
ஆனால், படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. க்ரேன் கேமராவில் இயக்குநர் ஹெச்.வினோத் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம், படப்பிடிப்புத் தளத்தில் டுகாடி பைக்குகள் வரிசையாக நிற்கும் புகைப்படம், வெளிநாட்டு ரேஸ் பைக் நிற்கும் புகைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன.
இதில் வெளிநாட்டு பைக் புகைப்படத்தைத்தான் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் அதுதான் கண்டிப்பாக அஜித்தின் பைக்காக இருக்கும் என்றும், அதில்தான் வில்லனின் ஆட்களைத் துரத்துவார் என்றும் இப்போதே கணித்து வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் யாவுமே இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. இதில் எந்தவொரு புகைப்படத்திலுமே அஜித் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை நிறச் சட்டையுடன் அஜித் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஆனால், அந்தப் புகைப்படம் போனி கபூர் வீட்டில் நடைபெற்ற ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்தது என்கிறார்கள். 'வலிமை' படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்றும், இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.