முதல் பார்வை: ஜிப்ஸி

முதல் பார்வை: ஜிப்ஸி
Updated on
3 min read

காஷ்மீரில் நடக்கும் போரில் பெற்றோரை இழக்கும் சிறுவனான ஜிப்ஸி (ஜீவா) நாடோடி ஒருவரால் வளர்க்கப்படுகிறார். எங்கும் நிலையாகத் தங்காமல் யாதும் ஊரே என தேசாந்திரியாகத் திரிகிறார்.

வளர்ப்புத் தந்தை இறந்து போகவே தன் குதிரையுடன் தனித்து விடப்படும் ஜீவா தமிழ்நாட்டின் நாகூருக்குச் செல்கிறார். அங்கு கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியக் குடும்பத்தில் வளரும் பெண்ணான வஹீதாவைக் (நடாஷா) கண்டதும் காதல் கொள்கிறார். நடாஷாவுக்கும் ஜீவா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. திருமணம் நிச்சயமான நடாஷா, ஜீவாவுடன் சேர்ந்து வீட்டை விட்டுத் தப்பிக்கிறார்.

தேசம் முழுக்க நாடோடிகளாகத் திரியும் இருவருக்குள்ளும் காதலும் வெகு வேகமாக வளர்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் வாரணாசி போல காண்பிக்கப்படும் ஒரு ஊரில் இஸ்லாமிய முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். நடாஷா நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் ஊரில் வெடிக்கும் மதக் கலவரம் அவர்களது வாழ்வையே திருப்பிப் போடுகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே ‘ஜிப்ஸி’ படத்தின் கதை.

ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாக சென்சார் பிரச்சினையில் சிக்கி இதோ அதோ என்று ஒருவழியாக வெளியாகிவிட்டது. ‘ஜோக்கர்’ படத்தில் கழிப்பறையைப் பிரச்சினையையும், சாமானிய மனிதர்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் கையிலெடுத்துக் கொண்ட இயக்குநர் ராஜுமுருகன் ஜிப்ஸியில் மதங்களை வைத்து நடக்கும் அரசியலை மையமாக வைத்துக் களமிறங்கியிருக்கிறார்.

ஜிப்ஸியாக ஜீவா. எந்த இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்ளாமல், பொருளாதாரக் கட்டமைப்புகளில் தேங்கி விடாமல் தேசம் முழுக்கத் திரியும் நாடோடிகளைக் கண்முன் நிறுத்துகிறார். பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கான களத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தான் ஏற்ற கதாபாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். இந்தக் கதையில் ஜீவாவைத் தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று தோன்றும் அளவுக்குத் தேர்ந்த நடிப்பு.

வஹீதாவாக நடாஷா சிங். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடிப்பு இல்லையென்றாலும் பாத்திரத்துக்குத் தேவையான அப்பாவித்தனத்தைக் காட்டியிருக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் படம் முடியும் வரை ஒரே விதமான பாவனைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

கண்டிப்பான இஸ்லாமியக் குடும்பத் தலைவராக லால் ஜோஸ், கேரள காம்ரேடாக சன்னி வேய்ன், கலவரத்தை முன்னின்று நடத்துபவராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்.

செல்வகுமாரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக முதல் பாதி முழுவதும் இவர்கள் இருவரின் ஆதிக்கம்தான். ஜீவா பயணம் செய்யும் ஒவ்வொரு ஊரையும் காட்டும்போது நம்மையும் அங்கு இழுத்துச் செல்கின்றன ஒளிப்பதிவும் அதற்கேற்ற பின்னணி இசையும். சந்தோஷ் நாரயணின் இசையில் வெள்ளி நிலவே பாடலும், மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடலும் கேட்டதுமே ‘பச்சக்’ என்று மனதில் ஒட்டிக்கொள்ளும் ரகம். இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வெரி வெரி பேட்’ பாடல் படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றம்.

2002 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் என்ற புகைப்படங்கள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் ஒருவர் கையில் வாளோடு ஆக்ரோஷமாக கத்துவது போல ஒரு புகைப்படமும், இன்னொருவர் கையெடுத்துக் கும்பிட்டு அழுவது போலவும் அந்தப் புகைப்படங்கள் இருக்கும். சில வருடங்களுக்குப் பிறகு கையில் வாளோடு இருந்த அந்த நபர் மனம் திருந்தி, புகைப்படத்தில் அழுது கொண்டிருந்தவரைச் சந்தித்து மன்னிப்புக் கோரினார். இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் அப்போதைய நாளேடுகளில் தலைப்புச் செய்தியானது.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாய் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி அதன் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். நாகூர் காட்சிகள், பாடல்கள் தவிர்த்து ஜீவா - நடாஷா காதல், இடையிடையே சமூகப் பிரச்சனைகள் குறித்த வசனங்கள் என்று நகர்கிறது முதல் பாதி.

ஆனால் காதல், சமூகப் பிரச்சனைகள் இரண்டுமே அழுத்தமான விதத்தில் சொல்லப்படவில்லை. காதல் காட்சிகள் மிகவும் மேம்போக்கான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு ஒரு நாடோடியின் மேல் ஈர்ப்பு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகளில் சிறிதளவும் நம்பகத்தன்மை இல்லை. இடைவேளைக்கு முன்பான கலவரக் காட்சிகள் வரைக்குமே படம் நமக்குள் பெரிதாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இடைவேளைக்கு முன்னால் வரும் கலவரக் காட்சிகள் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளன. மதக் கலவரங்களின் கோர முகமும், ரத்த வெறியும் கண்முன்னால் நிறுத்தப்படுகிறது. இந்தக் கலவரக் காட்சிகள் முழுக்கவும் சென்சார் போர்டின் திருவிளையாடலால் ப்ளாக் அண்ட் வொயிட்டில் காட்டப்படுகிறது. ஆனாலும் அந்தக் காட்சிகள் பார்ப்பவரின் மனதை உலுக்கத் தவறவில்லை.

நிமிர்ந்து உட்கார வைக்கும் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைக்கதை தொய்வு நிலைக்குச் செல்கிறது. கலவரத்தைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும், மத அரசியல் குறித்துச் சொல்ல விரும்பிய விஷயங்களும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்பதும், எளிதில் ஊகிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளும் படத்தின் மிகப்பெரிய மைனஸ். அதிலும் இறுதிக் காட்சிகளில் மேடையில் கலவரத்தின் இரு முகங்கள் சந்தித்துக் கொள்வதாகக் காட்டப்படும் காட்சிகளில் அதீத நாடகத்தனமே வெளிப்படுகிறது.

நாட்டின் முக்கியமான பல சமூகப் பிரச்சினைகளைப் படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை தைரியமாக படமாக்கியதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால் அவற்றை இன்னும் அழுத்தமாகச் சொல்லி, திரைக்கதையை இன்னும் செதுக்கியிருந்தால் தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படவேண்டிய க்ளாசிக் ஆகியிருக்கும் இந்த ‘ஜிப்ஸி’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in