

'பாகுபலி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2' தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை தமிழகமெங்கும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
இந்தியளவில் வெளியான 'பாகுபலி' படத்துக்கு, மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 'பாகுபலி 2' படத்துக்கான படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத 2ம் பாகத்துக்கு, தற்போதே விநியோகஸ்தர்கள் மத்தியில் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 'பாகுபலி' முதல் பாகத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சுமார் 12 கோடிக்கு கைப்பற்றியது.
ஆனால், 'பாகுபலி 2' படத்தை சுமார் 40 கோடிக்கு விலைபேசி வருகிறார்கள். இப்படத்திற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.