

வெவ்வேறு துறையில் பணியாற்றும் 4 பேர் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கொள்ளையை 6 மணிநேரத்துக்குள் திட்டமிட்டு முடிக்க வேண்டும் என்ற சூழல். அப்படி செய்யத் துணியும்போது அவர்கள் சந்திக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் என்ன என்பதுதான் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' திரைப்படத்தின் களம்.
இதில் நாயகனாக பரத் நடிக்கிறார். வில்லனாக அனூப் காலித் நடிக்கிறார். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சுனிஷ்குமார் கூறியபோது, ‘‘அடுத்து என்ன? என்ற பதைபதைப்பு ரசிகர்களிடம் கடைசி வரை இருந்தால்தான், உண்மையான த்ரில்லர் படம். அப்படி ஓர் ஆக்ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் களம் இது. இசைப் பணிகளை கைலாஷ் மேனன் மேற்கொள்ள, சுனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் பரத் - அனூப் இடையிலான ஆக்ஷன் காட்சிகள் வெகுவாக பேசப்படும்’’ என்றார்.
சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன.