

ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், மந்த்ரா பேடி, சுரபி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் உருவான படம் 'அடங்காதே'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
பல மாதங்களாகவே இந்தப் படம் தயாரிப்பிலேயே இருக்கிறது. படப்பிடிப்பும் முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '' வேற வழியில்லை... வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை... ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'கன்னி மாடம்' திரைப்படம் ஆவணக் கொலைகள் குறித்து காத்திரமாகப் பேசியது. 'திரௌபதி' திரைப்படம் நாடகக் காதல், ஆவணக் கொலை குறித்துப் பேசியது. இந்நிலையில் நாடகக் காதல், ஆணவக் கொலைகள் குறித்து நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும் என்று சண்முகம் முத்துசுவாமி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.