

'துப்பறிவாளன் 2' படத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென்றால் என்ற கடிதத்தில் சில கட்டளைகளை மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.
'சக்ரா' படத்தில் நடித்துக்கொண்டே, 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பையும் லண்டனில் தொடங்கினார் விஷால். மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரசன்னா, கெளதமி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். லண்டன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பியது படக்குழு.
அந்த தருணத்தில்தான், இந்தப் படத்துக்கு முன்பாக மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மிஷ்கின் சம்பளம் அதிகமாக வேண்டும் என்றெல்லாம் கேட்டதாகவும், இதனால் விஷாலுக்கும் அவருக்கும் சண்டை எனவும் தகவல்கள் வெளியாகின.
இறுதியாக, 'துப்பறிவாளன் 2' படத்திலிருந்து மிஷ்கின் விலகவே, விஷால் இயக்கவுள்ளார். தற்போது இந்தப் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிஷ்கின் எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் 15 கட்டளைகள் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
சில கட்டளைகளின் பட்டியல்
* 'சைக்கோ' படம் வெற்றியடைந்திருப்பதால் முன்பு ஒப்புக்கொண்ட 3 கோடி ரூபாய் சம்பளத்தை அதிகப்படுத்தி 6 கோடி ரூபாயாகத் தர வேண்டும்.
* எனக்கு எந்த ஸ்டார் ஹோட்டல் பிடித்திருக்கிறதோ, அதில்தான் தங்குவேன். அது தொடர்பாக எந்தவொரு கேள்வியை விஷாலோ மற்றும் அவர் சம்பந்தப்பட்டவர்களோ கேட்கக் கூடாது.
* 'துப்பறிவாளன் 2' படம் முடியும் வரை, என் அலுவலகத்தில் ஆகும் செலவுகளைத் தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ் அப் வாயிலாகவோ எந்தவிதத்திலும் விஷால் தரப்பிடம் பேச விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் இ-மெயில் மூலமாகவே பேசலாம்.
* தொடர்ச்சியாக 'துப்பறிவாளன் 3', 'துப்பறிவாளன் 4' வரிசை படங்களில் விஷால் நடிக்கக் கூடாது. அதன் தலைப்பு மற்றும் உரிமை என்னிடமே உள்ளது.
இவை 15 கட்டளைகளில் சில.
இதைப் படித்துவிட்டுத்தான் விஷால் மிகவும் கோபமாகி, இனிமேல் இந்தப் படத்தை மிஷ்கின் இயக்க வேண்டாம் என்றும் நானே இயக்குகிறேன் என்றும் முடிவெடுத்துள்ளார்.
தற்போது 'சக்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தை முடித்து வெளியிட்டுவிட்டு 'துப்பறிவாளன் 2' பணிகளை விஷால் தொடங்குவார் எனத் தெரிகிறது.