

திருநங்களுக்கு இல்லம் கட்டுவதற்காக 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த அக்ஷய் குமாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் லாரன்ஸ்.
நடிகர், இயக்குநர் என்பதை எல்லாம் தாண்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இல்லம், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு நிதியுதவி என பல்வேறு வழிகளில் லாரன்ஸ் உதவி புரிந்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு இல்லம் கட்ட முடிவு செய்தார் லாரன்ஸ்.
தனது முடிவினை, 'லட்சுமி பாம்' படப்பிடிப்பின் போது அக்ஷய் குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது உடனடியாக 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் அக்ஷய் குமார். இந்த நிதியுதவி தொடர்பாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும், உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்ல விரும்புகிறேன், இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகள் இல்லம் தொடங்க அக்ஷய் குமார் சார் 1.5 கோடி ரூபாய் கொடுக்கிறார்.
ஊனமுற்ற நடனக்கலைஞர்கள், குழந்தைகள் இல்லம், கல்வி சார்ந்த செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பணிகளை லாரன்ஸ் அறக்கட்டளை செய்வது வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நமது அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. திருநங்கைகள் இல்லம் கட்டுவதற்கான புதிய திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் நாங்கள் இந்த 15வது ஆண்டை கொண்டாட விரும்பினோம்.
எங்கள் அறக்கட்டளை அதற்கான நிலத்தை வழங்கியது. கட்டிடம் எழுப்புவதற்கான நன்கொடை வசூலிக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். எனவே ’லட்சுமி பாம்’ படப்பிடிப்பின் போது திருநங்கைகள் இல்லம் குறித்த திட்டத்தைப் பற்றி அக்ஷய்குமார் சாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்டதும் உடனடியாக மறுகேள்வியின்றி ரூ.1.5 கோடி தருவதாகக் கூறினார்.
உதவி செய்பவர்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன். எனவே இப்போது அக்ஷய் குமார் சார் தான் எங்கள் கடவுள். இந்த மிகப்பெரிய உதவி செய்ததற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அக்ஷய் குமார் சாரின் ஆதரவுடன் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளின் முன்னேற்றமும், அவர்களின் அடைக்கலமுமே எங்கள் அறக்கட்டளையின் அடுத்த குறிக்கோள்.
அனைத்து திருநங்கைகளின் சார்பாகவும் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பூமி பூஜை தேதியை விரைவில் அறிவிக்கிறோம். உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக் தான் 'லட்சுமி பாம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் தான் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்த ரீமேக்கை இயக்கி வருவதன் மூலம், இந்தி திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார் லாரன்ஸ்.