

'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதைக்களம் குறித்து கல்லூரி விழா ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 29) இரவு 7 மணியளவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று (பிப்ரவரி 28) கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது தான் இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார்.
அதில், "சமூகப் பொறுப்புணர்வு உள்ள படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன். மதத்தின் பெயரால் எப்படி சிலர் நம்மைப் பிரிக்க நினைக்கிறார்கள் என்பதை 'மூக்குத்தி அம்மன்' பேசும். நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.