

இதழியல், இலக்கியம், அரசியல்.. இவைதான் எனக்கு பிடித்த இடங்கள். என் பயணமும் இதையொட்டியே இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான், திரைப்பட நடிப்பு மீது பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை என்கிறார் விஜய் தொலைக்காட்சியின் ‘ஆயுத எழுத்து’ தொடரின் நாயகி சரண்யா. காளியம்மா - கலெக்டரம்மா ஆகிய இருவர் இடையே நடக்கும் ஆக்ரோஷமான சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு ஒளிபரப்பாகும் ‘ஆயுத எழுத்து’ தொடரில் ‘கலெக்டரம்மா’வாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் சரண்யா. அவருடன் உரையாடியதில் இருந்து..
விஜய் தொலைக்காட்சியில் நீங்கள் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் அளவுக்கு ‘ஆயுத எழுத்து’ தொடர், ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதா?
செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளினியாகவே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் 6 மாதம் உற்சாகமாக நடித்துவிட்டு வரலாமே என்று நினைத்துதான் விஜய் தொலைக்காட்சியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடருக்கு வந்தேன். சின்னத்திரையில் நடிக்க வந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகின்றன. என்னமோ எனக்கும், நடிப்புக்கும் பல வருஷ பந்தம் என்பதுபோல அப்படி ஒரு அங்கீகாரம். அதற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் முக்கிய காரணம். நான் ஐஏஎஸ் படிச்சு கலெக்டர் ஆகணும்னு என் அப்பாவுக்கு ரொம்ப ஆசை. ஆனால், இதழியல் படித்து ஊடகத் துறைக்குள் வந்ததால், அந்த ஆசை நிறைவேறவில்லை. இப்போது என்னை ‘கலெக்டர்’ ஆக்கி அழகு பார்க்கிறது ‘ஆயுத எழுத்து’ தொடர். ரசிகர்களும் ‘கலெக்டரம்மா’ என்று செல்லமாக அழைப்பது ரொம்ப மகிழ்ச்சி.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சில வாரங்களிலேயே ‘ரன்’ தொடரில் இருந்து வெளியேறியது ஏன்?
‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் முடிந்ததும், தொடர்களில் நாயகியாக நடிக்க பல தொலைக்காட்சிகளில் இருந்தும் வாய்ப்பு வந்தது. திரில்லர் களமான ‘ரன்’ தொடரை தேர்ந்தெடுத்தேன். சில அத்தியாயங்கள் நடித்தாலும், அது அற்புதமான அனுபவம். சில தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினேன், தொலைக்காட்சி மற்றும் தயாரிப்பு தரப்பின் அன்போடுதான் விடைபெற்றேன். எனக்கு பிறகு, அத்தொடரில் நாயகனாக நடிக்கும் கிருஷ்ணாவின் மனைவி சாயாசிங் என் கதாபாத்திரத்தை ஏற்றார். அதுவும் சிறப்பாகவே அமைந்தது.
திரைப்படம் போல, சின்னத்திரையிலும் மறு உருவாக்க (ரீமேக்) கலாச்சாரம் அதிகரிக்கிறதே?
டப்பிங் தொடர்கள் அந்நியமாக இருந்தது உண்மை. ஆனால், வேறொரு மொழியில் வெற்றி பெற்ற தொடரை நம் கலாச்சாரம், வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றி வழங்குவது வரவேற்கத்தக்கதே. என் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரே பெங்காலியில் இருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டதுதான். என்ன மாதிரி கதை, கதைக் களத்தை மறு ஆக்கம் செய்கிறோம் என்பது முக்கியம். பெங்காலி தொடர்களில் பெண்கள் கம்பீரமாக, வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். இங்கு கம்பீரமான பெண்கள் பெரும்பாலும் வில்லி பாத்திரத்தில்தான் பொருந்துகிறார்கள். நாயகி கதாபாத்திரம் மென்மையானதாக இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை சரிசெய்தால் ரீமேக்கிலும் வெற்றி பெறலாம். நேரடியாக ஒரு கதையை சொல்வது எளிது. ரீமேக் சவாலானது.
நடிகை பிரியா பவானிசங்கர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் உங்களோடு சக செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர்தானே..
சின்ன பெண்களாக இருவரும் செய்திப் பிரிவில் வேலை பார்த்த காலம் அது. அப்போதே அரசியல் உட்பட பல துறைகளிலும் தொலைக்காட்சி தரப்பு எங்களுக்கு வாய்ப்பு தந்தது. அந்த சுதந்திரத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டோம். இப்போதும் வலைதளங்களில் அரசியல், சமூக கருத்துகளை நாங்கள் பகிர்வதற்கு அதுவே அடிப்படை. ஒரு காலகட்டத்தில் இருவரும் திரைத்துறைக்கு வந்தோம். இதழியல், இலக்கியம், அரசியல் சார்ந்து தமிழ் மொழியில் இயங்குவதே என் விருப்பம். அதற்கு திரைக் களம் தேவை இல்லை என்பதால், அதில் ஆர்வம் காட்டவில்லை. எப்போதும் தொடர்களே போதும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிரியா பவானிசங்கர் போலவே வாணி போஜனும் நெருங்கிய தோழி. நெருங்கிய தோழிகளின் வளர்ச்சியும், பங்களிப்பும் மிகுந்த மகிழ்வை கொடுக்கிறது!